August 4, 2016

காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்தும் அதிகாரம் எம்மிடமில்லை – விக்னேஸ்வரன்!

தமிழ் மக்களது காணிகளை சுவீகரிப்பது தொடர்பாக இன்று அறியக்கிடைத்தால், நாளைய தினமே அதனை தடுத்து நிறுத்தும் அதிகாரம் தம்மிடமில்லையென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இவ்விடயம் குறித்து நிதானமாக செயற்பட வேண்டியது அவசியமென, முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பிரதேசத்திலுள்ள மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக, முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஏற்கனவே தெரிவித்ததாகவும், எனினும் இதற்கான தீர்வு கிடைக்கவில்லையென்றும் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து முதலமைச்சரிடம் வினவப்பட்டபோதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.

வட்டுவாகல் காணி சுவீகரிப்பு நடவடிக்கை குறித்து தமது அதிகாரிகள் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இவ்விடயத்தில் எடுக்கக்கூடிய சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவே காலதாமதம் ஏற்படுவதாகவும் இவ்விடயத்தில் மக்களுடைய உணர்வுகளை ஒருபோதும் புறக்கணிக்கவில்லையென்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், தாமும் தமது அதிகாரிகளும் இதுகுறித்து செயற்பட்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment