August 17, 2016

ஐந்தாவது நாளாகவும் தொடரும் பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம்!

இராணுவத்தினரின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமையில் இருந்து காணி உரிமையாளர்கள் ஐந்து நாட்களாக இரவு பகலாக பல சிரமங்கள் மற்றும் இராணுவத்தினரின் இடையூறுகளுக்கு மத்தியில் குறித்த இடத்திலேயே சமைத்து உணவு உண்டு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


இவர்களது போராட்டத்தினைக் கைவிடுமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு ,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி .எம் . சுவாமிநாதன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“கிளிநொச்சி மாவட்ட கரைச்சிப் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பரவிப்பாஞ்சான் கிராமத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்து உறவினர்களுடனும் நண்பர்களுடனும் வாழ்ந்து வருவதனை நாம் அறிவோம்.

அவர்களுடைய காணிகளை அரச படையினரிடம் இருந்து விடுவிப்பதற்கான மீள்குடியேற்ற அமைச்சினது முன்னெடுப்பினை அடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நான்கு ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளதாக எமக்கு அறிவித்துள்ளார்.

மேலும் பதின்மூன்று ஏக்கர் காணிகளை விடுவிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை முன்னெடுப்பதற்கு நான் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.
எனவே எதிர்வரும் சில வாரங்களிற்குள் ஓர் பூரணமான தீர்வு பெறப்பட உள்ளதனால் போராட்டத்தை மேற்கொண்டுவரும் பரவிப்பாஞ்சான் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்த மக்களைஅதனைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்வதுடன் இதுதொடர்பான நடவடிக்கைகளை எனது அமைச்சின் மூலம் நான் முன்னெடுப்பேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் தாம் கடந்த மாதமும் சுழட்சி முறையில் செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமும் அதிகாரிகளின் வாக்குறுதிகளை நம்பி கைவிடப்பட்டது.

ஆனால் அவை எதுவும் நடைபெறவில்லை. தமது காணிகளில் உள்ள இராணுவத்தினை வெளியேற்றித் தாங்கள் அனைவரையும் மீள்குடியேற அனுமதித்தாலே தாம் கவனயீர்ப்பு போராட்டத்தினைக் கைவிட முடியும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பரவிப்பாஞ்சானில் இராணுவத்தினர் வசமிருந்த சுமார் நான்கரை ஏக்கரில் இருந்து இராணுவத்தினர் நேற்றைய தினம் வெளியேறி கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர்.

விடுவிக்கப்பட்ட காணியில் பதினைந்து உரிமையாளர்களுக்குரிய பதிவுகள் இருப்பதாகவும் இதில் ஒன்பது காணி உரிமையாளர்கள் தமது பத்திரங்களுடன் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாகவும் அதிலும் ஏழுபேருடைய பத்திரங்களே சரியானவைகாக இருப்பதோடு, சரியான காணியின் உரிமைப் பத்திரங்களினை சமர்ப்பிப்பவர்களுக்கு காணியின் எல்லை நிர்ணயங்கள் பதிவுகள் என்பன ஆராயப்பட்டு ஓரிரு நாட்களுக்குள் மக்களின் பாவனைக்கு குறித்த பகுதி கையளிக்கப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment