August 3, 2016

திருகோணமலை கடற்படை வதைக்கூடத்தை குற்றப்பிரதேசமாக நீதிமன்றம் அறிவிப்பு!

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் அமைந்துள்ள 'கன்சைட்' எனப்படும் நிலத்தடி சித்திரவதைக் கூடமானது ஒரு குற்றப் பிரதேசமே என கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன நேற்று அறிவித்தார்.
அதனால் அப்பகுதிக்குள் வெளியார் நுழைவதனூடாக சாட்சியங்கள் அழிவடையலாம் என சுட்டிக்காட்டிய நீதிவான், காணாமல் போன 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் பெற்றோர், உறவினர்களை தேவை ஏற்படும் பட்சத்தில் விசாரணை அதிகாரி, மன்றின் அனுமதியோடு அவர்களை அங்கு அழைத்து செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.

 
அத்துடன் பல வருடங்களாக நிலுவையில் உள்ள இந்த கடத்தல் விவகாரம் தொடர்பிலான வழக்கில் உடன் தலையீடு செய்யுமாறும், மன்றுக்கு உதவியாக சிரேஷ்ட அரச சட்ட வாதி ஒருவரை வழக்கு விசாரணைகளின் போது மன்றில் ஆஜராக்குமாறும், சட்ட மா அதிபருக்கு நீதிமன்ற பதிவாளர் ஊடாக நேற்று இரண்டாவது முறையாகவும் நீதிவான் அறிவித்தல் விடுத்தார்.

இரண்டாவது அறிவித்தலையும் சட்ட மா அதிபர் கணக்கில் கொள்ளாது செயற்படின் தான் தொலைபேசியூடாக நேரடியாக சட்ட மா அதிபரை தொடர்புகொள்ள வேண்டி வரும் எனவும் நீதிவான் லங்கா ஜயரத்ன எச்சரித்தார்.

No comments:

Post a Comment