August 4, 2016

ஸ்ரீ கொத்தவைப் பாதுகாக்கும் நாகங்களாக செயற்படாதீர்கள்! - கூட்டு எதிரணி கோரிக்கை !

ஸ்ரீ கொத்தவைப் பாதுகாக்கும் நாகங்களாக செயற்பட வேண்டாம் என அரசாங்கத்தில் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களிடம் கூட்டு எதிர்க் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாத யாத்திரையின் வெற்றி தொடர்பில் மக்களே பெரும் சாட்சி என்பதால் போட்டி போட்டுக் கொண்டு கருத்துத் தெரிவிப்பவர்களுக்குப் பதில்கூற வேண்டிய அவசியமில்லை என்றும் கூட்டு எதிர்க் கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

 
திருடர்களைக் கைதுசெய்வதை நிறுத்தக் கோரியே நாம் பாதயாத்திரை மேற்கொண்டதாக கூறுகின்றனர். திருடர்களைக் கைது செய்வதில் எமக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. திருடர்கள் பச்சையா, நீலமா, சிவப்பா என்பதிலும் எமக்குக் கவலை இல்லை. எனினும் திருடர்களைப் பிடிக்கின்ற தோரணையில் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் வேட்டையை நிறுத்த வேண்டுமென்பதே எமது கோரிக்கை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஐந்து வருடங்களுக்கு அரசாங்கத்தை எதுவும் செய்ய முடியாது என்பவர்களுக்கு கடந்த 1960, 2000, 2001 காலங்களில் இடம்பெற்ற மாற்றங்கள் பற்றிக் குறிப்பிட விரும்புவதாகவும் நாட்டு மக்கள் தமது கருத்துக்களோடு ஒன்றித்துள்ளமை தமக்குப் பெரும் பலம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டு எதிர்க்கட்சியின் (மஹிந்த அணி) விசேட செய்தியாளர் மாநாடொன்று நேற்று (03) கொழும்பு என். எம். பெரேரா நிலையத்தில் இடம்பெற்றது. கூட்டு எதிர்க் கட்சியின் முக்கியஸ்தர்களும் முன்னாள் அமைச்சர்களுமான டளஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டு இந்தக் கருத்துக்களை வெளியிட்டனர்.

No comments:

Post a Comment