August 30, 2016

புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைக் காணவில்லை என அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்ய சாத்தியமில்லை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காணவில்லை என அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்ய சாத்தியமில்லை என இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.


2009ம்ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.

பிரபாகரனின் சடலம் தொடர்பில் மரபணு சோதனையோ அல்லது இறப்புச் சான்றிதழோ வழங்கப்படாத காரணத்தினால் பிரபாகரனைக் காணவில்லை என காணாமல் போனோர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் அதற்கு அவரது உறவினர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எனினும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் பிரபாகரனின் சகோதர சகோதரிகள், காணாமல் போனோர் அலுவலகத்தில் பிரபாகரனைக் காணவில்லை என முறைப்பாடு செய்யக்கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மரணப் படுக்கையில் அவதியுற்ற காலப்பகுதியில் அவரது வெளிநாட்டு வாழ் பிள்ளைகள் எவரும் அவரை பார்வையிட இலங்கை செல்லவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான ஓர் பின்னணியில் தமது சகோதரரை கண்டு பிடித்து தருமாறு பிரபாகரனின் சகோதர சகோதரிகள் கோரிக்கை விடுக்கக்கூடிய சாத்தியங்கள் அரிது எனத் தெரிவிக்கப்படுகிறது. சிவாஜிலிங்கத்திற்கும் இந்த விடயம் தெரியும் என இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இறுதி தருணங்களில் பார்வதி அம்மாள் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் பார்வையிட ஆவலுடன் இருந்த போதிலும் அந்த ஆசை நிறைவேறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment