August 3, 2016

லசந்த கொலை விவகாரம்: இராணுவ புலனாய்வாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வாளரின் விளக்கமறியல், எதிர்வரும் 11ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.


லசந்த கொலை தொடர்பான வழக்கு இன்று (புதன்கிழமை) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் மொஹமட் சஹாப்தீன் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, சிங்கள பத்திரிகையொன்றின் பிரதம ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில், குறித்த இராணுவ புலனாய்வாளரை எதிர்வரும் 8ஆம் திகதி கம்பஹா நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கும் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

லசந்த கொலை தொடர்பில் கடந்த மாதம் 15ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இராணுவ புலனாய்வாளரான மேஜர் பிரேமானந்த உதாலகம, கடந்த மாதம் 27ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டபோது லசந்தவின் சாரதியால் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ராஜபக்ஷ ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்த லசந்த விக்ரமதுங்க, 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காலை அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்த வேளையில், அத்தியடிய பகுதியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் கிடப்பில் போடப்பட்ட லசந்தவின் கொலை தொடர்பான விசாரணை நல்லாட்சியில் மீள விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், இவ்வருட ஆரம்பத்தில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரது மாதிரி உருவப்படங்களையும் பொலிஸார் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment