July 29, 2016

சர்வதேச விசாரணையை கோருவதன் நியாயம் தெரிகிறதா?

வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று தமிழ் மக்கள் வலியுறுத்துவதற்கு வலுவான காரணங்கள் உண்டு.


வன்னி பெருநிலப்பரப்பில் நடந்த இன அழிப்புத் தொடர்பில் உள்நாட்டு விசாரணை நடைபெறுமாகவிருந்தால் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படாமல் போகலாம்.

குறிப்பாக குமாரபுரம் 26 பொதுமக்கள் படுகொலை வழக்கின் தீர்ப்பை குறிப்பிட்டுக் கூறலாம்.

அதேநேரம் தமிழின அழிப்பு எதுவும் நடைபெறவில்லை என்பதுடன் படையினர் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதான முடிவுகளே கிடைக்கும்.

இதன்காரணமாகவே போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென தமிழ் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இவ்வாறு சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டுமென வலியுறுத்துவதானது, இந்த நாட்டில் எதிர்காலத்தில் இன ஒற்றுமை ஏற்படுவதற்கு பேருதவியாக அமையும்.

அதாவது போர்க்குற்ற விசாரணையின் போது உள்நாட்டு நீதி பரிபாலனம் சார்ந்தவர்கள் மட்டுமே இடம்பெறுவார்களாயின் அவர்கள் போர்க் குற்றம் புரிந்தவர்களின் அழுத்தங்களுக்கு ஆளாகவேண்டிவரும் என்பதுடன் உண்மையை கண்டறிவதிலிருந்து விலகிச் செல்கின்ற நிலைமையும் ஏற்படக்கூடிய வாய்ப்புண்டு.

இத்தகைய நிலைமை தமிழ் மக்களிடம் மிக மோசமான மனக்கொதிப்பை ஏற்படுத்தும். அதாவது எங்கள் இனத்தை கொன்றொழித்து விட்டு இப்போது போர்க்குற்ற விசாரணை என்ற போர்வையில் போர்க்குற்றவாளிகளை காப்பாற்றுகின்ற கபடத்தனம் நடக்கின்றது என தமிழ் மக்கள் கருதிக்கொள்வர்.

இத்தகைய கருத்தியல் பெரும்பான்மை இனத்தின் மீதான பகையை தணியவிடாமல் கொதி நிலையில் வைக்கச் செய்யும்.

ஆகையால்தான் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.

சர்வதேச நீதிபதிகள் விசாரணையை மேற்கொள்ளும் போது போரில் ஏற்பட்ட இழப்புக்களை அவர்கள் கவனத்தில் எடுப்பர் என்பதும், போர்க் குற்றம் இழைத்தவர்களை அவர்கள் வெளிப்படையாக அடையாளப்படுத்துவர் எனவும், போர்க்குற்ற விசாரணையில் எவரையும் பாதுகாக்க வேண்டும் என்ற தேவை அவர்களிடம் இருக்காது என்பதும் தமிழ் மக்களின் திடமான நம்பிக்கை.

இருந்தும் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவதற்கு இம்மியும் அனுமதிக்கப்படமாட்டது என இலங்கை அரசு அடிக்கடி கூறிக்கொள்கிறது.

அதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட, தான் ஜனாதிபதியாக இருக்கும் வரை போர்க்குற்ற விசாரணை தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் வருவதை அனுமதிக்க மாட்டேன் என பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

ஆகப் போர்க்குற்றம் தொடர்பில் ஒரு நீதியான விசாரணையை நடத்த நல்லாட்சியும் விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் பங்கேற்றால், நிச்சயமாக போர்க் குற்றவாளிகள் இனங்காணப்பட்டு தண்டனை பெறுவர்.

அதிலும் முன்னைய ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும்.

ஆகையால்தான் சர்வதேச நீதிபதிகளுக்கு இடங்கொடாமல் உள்நாட்டிலேயே விசாரணையை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது உறுதியாகிறது.

இதன் வெளிப்பாடுகளையும் நாம் காணமுடிகிறதல்லவா?

No comments:

Post a Comment