July 8, 2016

பயங்கரவாத தடைச் சட்டம் தமிழருக்கு மட்டுமா? - சிவமோகன்!

நீதித்துறை மற்றும் சட்டத்துறை சிறப்பாக காணப்பட்டால் மட்டுமே நாட்டில் நல்லாட்சி நிலவுவதாகக் கூறலாம்.
ஆனால் இலங்கையில் சட்டம், நீதி என்பன அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களினால் ஆட்சி செய்யப்படுவதால் தேசிய கொடி போல நிமிர்ந்து நிற்க வேண்டிய சட்டங்கள் தற்போது இலங்கையில் வளைந்து நெளிந்துள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் சிவமோகன் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீதித்துறை மற்றும் சட்டத்துறை பற்றிய விவாதத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது ஊடகவியலாளருக்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை மாறிவருவதாகவும், முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக் காலமான 2004 ஏப்ரல் தொடக்கம் 2009 செப்ரெம்பர் வரை 33 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டும் காணாமலும் போயுள்ளனர். இதில் 29 ஊடகவியலாளர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த காலத்தில் நாட்டில் வெள்ளை வான் கடத்தல், பாதாள கொள்ளை போன்ற குற்றச்செயல்களுக்கு நம் அரசு கைகொடுத்துள்ளது. இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் நாட்டில் சுகந்திரமாக நடமாடுகின்றனர். இது நல்லாட்சிக்கு உகந்த விடயமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் வன்னிப்போரில் பாதிக்கப்பட்ட போராளிகளின் வாழ்க்கை தற்போதும் கேள்விக்குறியாக அமைந்துள்ளது. அவர்களின் வாழ்க்கை அமைதி இழந்துள்ளது. இதற்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள அரசு முன் வர வேண்டும். காடைகளைக் கொண்டு மக்களை அடக்காமல் நீதி மற்றும் சட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment