June 3, 2016

சிறிலங்காவின் கடன் நெருக்கடி – அனைத்துலக ஊடகம்!

ஏற்கனவே பல பில்லியன் டொலர்களை சீனாவிடமிருந்து கடன்பெற்ற சிறிலங்கா கடந்த மாதம் அனைத்துலக நாணய நிதியத்திடம் 1.5 பில்லியன் டொலர் நிதி தருமாறு உதவி கோரியது.
சிறிலங்காவின் இந்த நிலைப்பாடானது கடந்த ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் மைத்திரிபால சிறிசேன நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் குறைப்பார் என நம்புபவர்களுக்கான ஒரு உண்மையான சோதனைக் களமாகக் காணப்படுகிறது.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாகக் காணப்பட்ட சிறிலங்காவின் பொருளாதார வளர்ச்சியானது தற்போது 4.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. முதல் காலாண்டில் 577 மில்லியன் டொலர் கடன் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் ஏற்றுமதிகள் மற்றும் அந்நியச்செலாவணி போன்றன வீழ்ச்சியடைந்த அதேவேளையில், சிறிலங்கா ரூபா வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காக மத்திய வங்கியானது வெளிநாட்டுப் பரிமாற்ற ஒதுக்கங்களை மூன்றில் ஒரு பகுதியால் குறைத்தது.

சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ச மீதே பழிசுமத்தப்படுகிறது. இவர் தனது மூன்று சகோதரர்களை முக்கிய அமைச்சுப் பதவிகளுக்கு நியமித்திருந்தார். அதாவது நிதி, பாதுகாப்பு மற்றும் பொதுச் சேவைகள் போன்ற மூன்று அமைச்சுப் பதவிகளுமே இவ்வாறு வழங்கப்பட்டிருந்தன.

இதன்மூலம் சிறிலங்காவின் பாதீட்டின் 70 சதவீதத்தை ராஜபக்ச சகோதரர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். ராஜபக்சவின் நண்பர்களில் ஒருவரே மத்திய வங்கியின் பணிப்பாளராக இருந்தார். இவர் பணத்தை அச்சடித்ததன் மூலம் 15 சதவீத பணவீக்கத்தை ஏற்படுத்தினார்.

ராஜபக்சவின் திட்ட வரைபுகளில் தன்னையும் ஒரு பங்காளியாக இணைத்துள்ளமையை சீனா நிரூபித்தது. சிறிலங்காவின் துறைமுகங்களைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் சீனா, சிறிலங்காவிற்கு நிதியுதவி செய்தது. 2007ல், ராஜபக்ச 1.5 பில்லியன் டொலர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது.

மகிந்தவின் சொந்த இடமான அம்பாந்தோட்டையில் விமானநிலையம் மற்றும் துறைமுகம் போன்றவற்றைக் கட்டுவதற்காக மொத்தத் தேசிய உற்பத்தியில் 2 சதவீதமான 1.5 பில்லியன் டொலர் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டது. துறைமுகத்தின் பிரதான வேலைத்திட்டங்களை சீனத் துறைமுக பொறியியல் நிறுவனம் மற்றும் சினோஹைட்ரோ கூட்டுறவு நிறுவனம் ஆகிய இரு சீன நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்டன.

ஆனால் சீனாவால் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட கடனானது உயர் வட்டி வீதத்தைக் கொண்டிருந்தது. போதியளவு ஆய்வு மற்றும் போட்டிக்குரிய ஏலம் போன்றவற்றைக் கவனத்திற் கொள்ளாமலேயே அம்பாந்தோட்டைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக சிறிலங்காவின் அதிகாரிகள் தற்போது கூறுகின்றனர்.

அம்பாந்தோட்டை விமானநிலையம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டிற்குள் இதன் ஊடான பயணிகள் விமானசேவைகள் தடைப்பட்டுள்ளன. அத்துடன் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் நாளாந்தம் ஒரு கப்பல் மட்டுமே காணப்படுகிறது.

21 மில்லியன் டொலர் பெறுமதியான தேசிய கலையரங்கம், 104 மில்லியன் டொலர் பெறுமதியான தொலைத் தொடர்பாடல் கோபுரம் மற்றும் கொழும்பில் 1.4 பில்லியன் டொலர் பெறுமதியில் துறைமுக நகரத் திட்டம் போன்றன சீனாவால் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறிலங்காவிற்கு வழங்கப்பட்ட சீனாவின் கடனானது நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியின் 10 சதவீதமான 8 பில்லியன் டொலர்களாகும்.

ராஜபக்சவாலும் அவரது குடும்பத்தவர்களாலும் நிதி மோசடிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் இவர் பதவியிலிருந்த நீக்கப்பட்டார்.

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள ராஜபக்சவின் நிதியில் பில்லியன் டொலர்களைப் பெறுவதற்கான முயற்சிகள் மேற் கொள்ளப் படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

2010 தொடக்கம் 2015 வரையான சிறிலங்காவின் மொத்தத் தேசிய உற்பத்தியின் 94 சதவீதமான வெளிநாட்டுக் கடன் மற்றும் சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனிற்காக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் 30 மில்லியன் டொலர் வட்டி போன்றன மேலும் நாட்டின் பொருளாதாரத்தை மோசமாக்கியுள்ளது.

சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான சில நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் விரும்புகிறது. வரிவிலக்கு, விடுமுறை மற்றும் சிறப்பு வீதங்கள் போன்றவற்றைக் குறைப்பதன் மூலும் நாட்டின் வரி முறையை இலகுபடுத்த புதிய அரசாங்கம் விரும்புகிறது.

ஆனால் பெறுமதி சேர் வரியை 11 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிகரிப்பதென்கின்ற அரசாங்கத்தின் தீர்மானமானது வர்த்தகச் செயற்பாடுகளைக் குழப்பும்.

அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழலை இல்லாதொழித்தல் மற்றும் வரி அதிகரிப்பை நிறுத்துதல் ஆகியன இவ்வாறான குழப்பங்களைத் தவிர்த்து நாட்டை சிறந்த வழிக்குக் கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும்.

ராஜபக்ச போன்ற ஆட்சியாளர்களின் ஆட்சியில் குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் எனவும் ஆனால் நீண்ட காலத்தில் இது தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்கின்ற பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும்.

ஜனநாயக பொறுப்புக்கூறலைப் பரிமாற்றிக்கொள்வதற்கு வழிதேடும் ஏனைய நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக உள்ளது.

No comments:

Post a Comment