June 3, 2016

சிங்கள மக்களின் மனதை வென்றெடுக்காமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை!- மனோ கணேசன் பேட்டி!

இலங்கையில் வாழும் பெரும்பாலான தமிழர்களின் மனதில் போரின் சுவடு இருக்கும்.
வெள்ளை வான், மோசமான படுகொலைகள், காணாமல் போகச் செய்தல் என பல இன்னல்களை, கடந்த ராஜபக்ச ஆட்சியில் தமிழ் மக்கள் சந்தித்து விட்டனர்.

அங்கு மைத்திரிபால சிறீசேன தலைமையில் புதிய ஆட்சி அமைந்து ஏறத்தாழ ஓராண்டாக ஆகிவிட்டது. இப்போது எப்படி இருக்கிறது தமிழ் மக்களின் நிலைமை?

இலங்கையின் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சர் மனோ கணேசனை கொழும்பில் நேரில் சந்தித்து உரையாடினோம்.

போருக்கு பிந்தைய சூழல் எப்படி இருக்கிறது?

நம்பிக்கை தருவதாக இருக்கிறது. கடந்த காலத்துடன் ஒப்பிட்டு இந்த வார்த்தையை நான் பயன்படுத்துகிறேன். கடந்த காலங்களில் எம் மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கவில்லை, சந்தோஷம் இருக்கவில்லை. துன்பம் இருந்தது, துயரம் இருந்தது, அவலம் இருந்தது.

நடுநிலை தன்மை இருக்கவில்லை, போலீஸ் மற்றும் நீதித்துறையில் அராஜகம் இருந்தது. நீதி செத்து இருந்தது. ஆட்சியில் இருப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற நிலை இருந்தது. கொலை, கொள்ளை செய்துவிட்டு தப்பிவிடலாம் என்ற நிலை இருந்தது.

இது பொதுவான நிலையாக இருந்தாலும், தமிழ் மக்கள் இந்த கஷ்டங்களை இருநூறு சதவீதம் அனுபவித்தார்கள். ஆனால், இப்போது அந்த நிலை மாறி இருக்கிறது. புதிய மந்திரி சபை பொறுப்பேற்ற இந்த ஏழு மாத காலங்களில், நாங்கள் குறிப்பிடத்தக்க சில சாதனைகளை செய்து இருக்கிறோம். இந்த ஏழு மாதங்களில் நாம் செய்த சாதனைகளை கடந்த காலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

சாதனைகள் என்று நீங்கள் எதனை குறிப்பிடுகிறீர்கள்?

நாட்டிலே அரஜாகத்தை ஒழித்து, ஜனநாயகத்தை நிலை நாட்டுவதில் வெற்றி கண்டுள்ளோம். போலீஸ் மற்றும் நீதித் துறையின் அராஜகம் குறைந்துள்ளது. அரசை கண்காணிப்பதற்காக நாங்கள் சுயாதீன ஆணைக்குழுக்களை உண்டாக்கி உள்ளோம்.

அது மட்டுமல்லாமல் ஜனாதிபதியின் கட்டற்ற அதிகாரங்களை குறைத்து, பாராளுமன்றத்திற்கு பதில் கூறும் பிரஜையாக மாற்றி இருக்கிறோம்.

இவை தவிர இந்த தேசத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூலகாரணமாக இருக்கக்கூடிய, தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் செயல்பாட்டினை தொடங்கி இருக்கிறோம். புதிய அரசியலமைப்பை வடிவமைக்க, அனைத்து உறுப்பினர்களையும் கொண்ட அரசியல் அமைப்பு பேரவையை உருவாக்கி இருக்கிறோம்.

அந்தப் பேரவையை வழிநடத்த, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளின் தலைமையில், ஒரு குழுவை அமைத்துள்ளோம். இவையெல்லாம் பாரிய சாதனைகள் தானே.

புதிய அரசியல் அமைப்பில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு?

முக்கியமாக மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம். முதலாவதாக, இந்தியாவில் இருப்பது போல் பிரதமர் தலைமையில் ஆட்சி நிர்வாகத்தை செயல்படுத்துவதா என்பதை ஆராய்ந்து வருகிறோம்.

அடுத்து, இப்போது விகிதாசார தேர்தல் முறை இங்குள்ளது. முன்பு இந்தியாவில் இருப்பது போல் தொகுதி தேர்தல் முறை இங்கு இருந்தது. அதில் சில பிரச்சினைகள் என்றுதான் நாங்கள் இந்த விகிதாசார முறைக்கு வந்தோம். ஆனால் இதிலும் சில பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால், விகிதாசார முறையும், தொகுதி முறையும் கலந்த ஒரு முறைக்கு செல்லலாமா என்றும் ஆய்வு செய்து வருகிறோம்.

இது அனைத்தையும் விட மிக முக்கியமாக, தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை ஆராய்ந்து வருகிறோம். அதாவது கொழும்பில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள், அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்று நம்புகிறோம். தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்.

தமிழர்களின் பூர்வீக காணிகள் இன்னும் திரும்ப தரப்படவில்லை, அரசியல் கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்த சூழலில் இந்த அரசை எப்படி நம்பிக்கையளிக்கும் அரசு என்கிறீர்கள்?



நாங்கள் பதவியேற்கும் போது மொத்தம் 220 அரசியல் கைதிகள் இருந்தார்கள். அதில் 40 பேர் விடுவிக்கப்பட்டு விட்டார்கள். மற்றவர்களையும் விடுதலை செய்வதற்கான சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. கணிசமான அளவில் காணிகள் திரும்பத் தரப்பட்டு விட்டன.

பத்து ஆண்டுகளாக ராஜபக்ச ஆட்சியில் நடக்காதவையெல்லாம் இந்த எட்டு மாதங்களில் நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அது பிழை. ஆனால், ஒவ்வொன்றாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. எல்லாமே நடந்துவிட்டது என்று நான் கூறவில்லை.

நாங்கள் நிம்மதி பெற்றுவிட்டோம் என்று சொல்ல வரவில்லை. அப்படிச் சொன்னால் நான் பொய்யனாகதான் இருக்க வேண்டும். அதேவேளையில், ஒன்றும் நடக்கவில்லை என்றும் சொல்ல முடியாது. ஆனால், சில நம்பிக்கையளிக்கும் நகர்வுகள் இருக்கின்றன. அந்த நம்பிக்கை பொய்த்தால், என் பதவியை துறந்து தமிழ் மக்களுக்காக போராடுவேன். நான் அரசாங்க அமைச்சராக இருக்கலாம். ஆனால், என் முதல் விசுவாசம் எம் தமிழ் மக்களிடம் தான், அதன் பின்புதான் அரசெல்லாம்.

தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையான வட-கிழக்கு இணைப்பை, புதிதாக பொறுப்பேற்றுள்ள இலங்கை அரசாங்கம் ஒத்துக் கொள்வதாக தெரியவில்லை. இதை தவிர்த்து தமிழ் மக்களின் கோரிக்கைகள் என்ன?

நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் இலங்கையில் வாழும் மொத்த தமிழ் மக்களின் ஜனத்தொகை 32 லட்சம். இதில் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்கள் அனைவரும் அடங்குவர்.

இதிலே 16 லட்சம் பேர் தான் வடக்குகிழக்கில் வாழும் ஈழத் தமிழர்கள், மிச்சம் உள்ள 16 லட்சம் பேர் இந்திய வம்சாவளியினர் மற்றும் இஸ்லாமியர்கள். தமிழர் பிரச்சினை என்றால் வடக்குகிழக்கில் வாழும் தமிழர்கள் பிரச்சினை என்று மட்டும்தான் புரிந்து கொள்ளப்படுகிறது. அது பிழையான புரிதல்.

அதேவேளை யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது வட கிழக்கு தமிழர்கள். அவர்களுக்கு நியாயம் பெற்றுத் தரவேண்டும், நீதி வாங்கித் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். வட கிழக்கிலே பிராபகரன் ஆயுதம் தூக்கிப் போராடிய போது, அம்மக்களுக்காக ஜனநாயக வழியிலே போராடியவன் நான். அதனால் மூன்று முறை கொலை தாக்குதலில் தப்பியவன் நான்.

நான் ஏன் இதை சொல்கிறேன் என்றால், அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும், அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் மற்ற அனைவரை விடவும் அக்கறையாக இருக்கிறேன் நான்.

'வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும், சமஷ்டி ஆட்சி கொண்டு வரப்பட வேண்டும்' என்பது என் நிலைப்பாடு. புதிய அரசியல் அமைப்பு வடிவமைப்பில் அதற்கான அழுத்தங்களை நாங்கள் கொடுப்போம். ஆனால், அந்த கோரிக்கைகளை முன் வைக்க வேண்டிய கடப்பாடு, அந்த மக்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகளான தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குதான் இருக்கிறது.

அவர்கள் சொல்லாததை நான் சொல்ல முடியாது. அதேநேரம், நான் முன்பே சொன்னதை போல, தமிழர் பிரச்சினை என்பது வடகிழக்கிற்கு வெளியேயும் இருக்கிறது. அதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.

வடகிழக்கு இணைக்கப்பட்டு, வடகிழக்கு தமிழர்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு, அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டால், இலங்கையில் வாழும் மொத்த தமிழர்களின் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று நினைக்க வேண்டாம். 50 விழுக்காடுதான் முடிவுக்கு வரும்.

ஏனெனில், மீதமுள்ள 50 சதவீதம் தமிழ் மக்கள் தெற்கில் வாழ்கிறார்கள். இதில் ஈழத்தமிழர்கள், இந்திய வம்சாவளி தமிழர்கள் அனைவரும் அடங்குவர். அதுபோல் வடக்கு கிழக்கிலும், இந்திய வம்சாவளி தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள்.

அதனால், அதிகாரம் அனைத்து தரப்பிற்கும் பரவலாக்கப்படவேண்டும். தெற்கில் வாழும் தமிழர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதை எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. தமிழர் பிரச்சினை, வடகிழக்கில் மட்டும் இல்லை. அதற்கு வெளியேயும் இருக்கிறது. தமிழக தலைவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஆயுத யுத்தம் முடிந்து விட்டது, ஆனால் பண்பாட்டு யுத்தம் நடப்பதாக கூறப்படுகிறதே. அதுவும் குறிப்பாக தமிழர்களை, வடக்கு மாகாணத்தில் சிறுபான்மையினராக்க சிங்களவர்கள் அதிகளவில் குடியமர்த்தப்படுகிறார்கள் என்கிறார்களே?

இல்லை. சிங்களவர்கள் சிறு தொகையினர், யுத்தம் தொடங்குவதற்கு முன்பிலிருந்தே வடக்கு கிழக்கில் வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் யுத்தம் தொடங்கிய பின் தெற்கு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். அதுபோல் தெற்கிலே கடந்த காலங்களில் தமிழர்கள் வாழ்ந்தார்கள். அவர்களும் யுத்தம் தொடங்கிய பின், வடபகுதிக்கு இடம்பெயர்ந்தனர். பிரச்சினை வரும் தமிழர்கள், தமிழர்கள் செறிவாக வாழும் பகுதிக்கு செல்வதும், சிங்களவர்கள், சிங்களவர்கள் செறிவாக வாழும் பகுதிக்கு செல்வதும் இயல்பானது.

இப்போது பிரச்சினை முடிந்தவுடன் அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அதை மறுக்க முடியாது. சிங்களவர்கள் குடியேறினாலும், தமிழ் மக்களை வடக்கில் சிறுபான்மையினராக ஆக்கிவிட முடியாது. சிங்களவர்களும் இயல்பாக தம் மக்களுடன்தான் வாழ விரும்புவார்கள். அவர்கள் வடக்கு செல்லவும் தயாராக இல்லை. வடக்கு கிழக்கு தமிழர்களின் அச்சம் தேவையற்றது.

பண்பாட்டு யுத்தம். அதாவது புத்த விகாரைகளை நிறுவுவது?

ஆம். ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சினிமா வசனம் போல், ‘யாருமே இல்லாத கடையில் யாருக்காகடா டீ ஆத்துற’ என்பது போன்றது. பெளத்த மதமே இல்லாத இடத்தில் , புத்த விகாரை நிறுவி என்ன பிரயோசனம். பெளத்த விகாரை நிறுவினாலும், அதை பராமரிப்பதற்கு அங்கு யாரும் இல்லை. இதுவும் தேவையற்ற அச்சம் என்றே நினக்கிறேன்.

மலையக தமிழர்களின் வாழ்நிலை இப்போது எப்படி இருக்கிறது?

மொத்தம் மூன்று லட்சம் மலையக தமிழர்கள், மிகவும் கஷ்டமான சூழ்நிலையில்தான் இருக்கிறார்கள். அதற்காக நாங்கள் அரசாங்கத்திற்கு வெளியேயும், உள்ளேயும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

அறவழிப் போராட்டம், பாராளுமன்ற வழிப் போராட்டம் என்பதையெல்லாம் தாண்டி, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு எப்படி தீர்வு காண முடியும் என்று நினைக்கிறீர்கள்?

சிங்கள மக்களின் மனதை வென்றெடுக்காமல், அவர்களின் நம்பிக்கையைப் பெறாமல், தேசிய இனைப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. அதற்காக அவர்கள் காலில் மண்டியிட்டு பிச்சைக் கேட்க வேண்டும் என்று கூறவில்லை. நியாயமான நம் கோரிக்கைகளை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

பெருமழையால் பாதிப்பு அதிகம் தானே?

ஆம். ஆனால் இம்மழை, மக்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து இருக்கிறது. அரசாங்கம் எழுந்து வருவதற்கு முன்பே இன, மத பேதங்களைத் தாண்டி, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மழையை வென்றெடுத்து இருக்கிறார்கள். அதேவேளை, அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறது. மழையால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சமும், வீடுகளை இழந்தவர்களுக்கு சேதத்திற்கு ஏற்றவாறும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை, இனி இந்தியா எப்படி கையாள வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

இந்தியா இல்லாமல் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்பதுதான் நிதர்சனம். இந்தியா மீது இங்குள்ள சில மக்கள் வெறுப்புணர்வை வளர்த்தாலும், இந்தியா இல்லாமல் தீர்வு இல்லை என்பதுதான் நிஜம். அரசியல் சாசனத்தின் 13 வது திருத்தத்தைக் கொண்டு வந்தது இந்தியாதான். அதனால் மற்ற அனைவரையும் விட இந்தியாவிற்கு அதிக பொறுப்பு இருக்கிறது.

தமிழக தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழக விவகாரங்களில் தலையிட நான் விரும்பவில்லை. ஆனால், கூடிய விரைவில் இரு குழுவாக வந்து தமிழக முதல்வரை சந்திப்போம். அதற்கான முயற்சிகளை இலங்கை வெளியுறவு அமைச்சகம் மூலம் எடுத்து வருகிறோம்

No comments:

Post a Comment