போர்க்குற்றவாளிகள் இலங்கையிலும், உலகலாவிய ரீதியிலும் சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கின்றனர் எனவும், இது அவர்களுக்கு எத்தகைய குற்றத்தையும் செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாமென்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் முன்னாள் போராளியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினருமான சின்னமணி கோகிலவாணி ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அவர் உரையாற்றுகையிலேயே, மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
சுயநிர்ணய உரிமை கோரி போராடிய தமிழ்த் தேசிய இனம், தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதாகவே மக்கள் உணர்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையை பொருத்தளவில் சிங்கள மேலாதிக்கவாத சிந்தனையால் சிங்கள மக்கள் நஞ்சூட்டப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள கோகிலவாணி, சிங்கள மக்களின் சிந்தனையில் நாட்டின் அதிகார வர்க்கம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென கூறியுள்ளார். அவ்வாறான ஒரு மாற்றம் நடைபெறும் வரையில் ஆட்சி மாற்றமானது தமிழ் மக்களுக்கான ஜனநாயகமாக இருக்க முடியாதென கோகிலவாணி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஒரு புறத்தில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் சிறியளவில் விடுவிக்கப்பட்டாலும், அபிவிருத்தி எனும் பெயரில் மறுபுறத்தில் திட்டமிட்ட வகையில் தமிழர்களின் பெருமளவான நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், சிறுபான்மையினரின் கலாசாரம் பல்வேறு வழிகளில் தாக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐ.நாவின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வரும் சூழல் ஏற்பட்டு வருவது மிகவும் ஆபத்தானதென கோகிலவாணி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment