June 7, 2016

திருக்கேதீஸ்வரம் மனித எச்சங்கள்; அமெரிக்காவிற்கு அனுப்ப சி.ஐ.டி அனுமதி கோரல் !

மன்னார் – திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களை
அமெரிக்காவிலுள்ள நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்புவதற்கான அனுமதியை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.

காணாமல் போனவர்கள் சார்பாக ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட 3 நிறுவனங்களிடம் மனித எச்சங்களை அனுப்பாத நிலையில், அமெரிக்கா – புலோரிடா மாநிலத்திலுள்ள நிறுவனம் சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர், புலோரிடா மாநிலத்திலுள்ள நிறுவனத்திற்கு மனித எச்சங்களை அனுப்புவதற்கான அனுமதியை குற்றப்புலனாய்வுப் பிரிவினரினால் மன்னார் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காணாமல் போனவர்களின் குடும்ப உறவுகள் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ். நிறைஞ்சன் தெரிவித்தார்.

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தோண்டுவது தொடர்பான வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் சட்டத்தரணி வி.எஸ். நிறைஞ்சன் தெரிவித்தார்.

புலோரிடா மாநிலத்திலுள்ள நிறுவனம் சிறந்ததது இல்லை எனவும் இந்த நிறுவனம் எவ்வாறு பரிசோதனைகளை மேற்கொள்ளுகின்றது என்பதனை மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



ஏற்கனவே மாத்தறை புதைகுழியின் போதும், இந்த அமெரிக்கா நிறுவனம் அங்கு கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மிருகத்தின் எலும்புக்கூடுகள் என்ற தகவலை தந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் அடிப்படையில் காணாமல் போனவர்கள் சார்பில் இந்த அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் நம்பிக்கை இல்லை என்று எதிர்ப்பை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவர்கள் சார்பாகவும், தங்களினால் முன்வைக்கப்பட்டிருந்த மூன்று நிறுவனங்களிடமும் தொடர்பை ஏற்படுத்தி, அவற்றின் அறிக்கையை அடுத்த தவணைக்கு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில், ஒகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, மனித புதைகுழிக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிணறு தொடர்பான வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக காணாமல் போனவர்களின் குடும்ப உறவுகள் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ். நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment