September 18, 2015

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் 23ம் திகதி மாபெரும் முற்றுகைப் போராட்டம்!

இந்திய ரோலர் படகின் அத்துமீறலை கண்டித்து மாபெரும் முற்றுகைப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை
எமிலியாம்பிள்ளை தெரிவித்தார். யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் கூட்டுறவு சங்க சம்மேளனத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்ட கரையோர கடற்பரப்பான சுண்டிக்குளம், பருத்தித்துறை, தாளையடி, கட்டைக்காடு, உடுத்துறை, காரைநகர், நெடுந்தீவு உள்ளிட்ட கரையோரப் பகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இதனால், இந்திய ரோலர் படகினை கட்டுப்படுத்துவதற்கும், தமது கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியினை மேற்கொள்வதனை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையின் பிரகாரம் கடந்த 04ம் திகதி யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் தீர்வுகள் எட்டப்படாத காரணத்தினால், மேற்படி கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ். மாவட்டத்தில் உள்ள 40 சங்கங்களின் தலைவர்கள் மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனர்.
இந்திய ரோலர் படகுகள் வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி மின்பிடியில் ஈடுபடுவதனால், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி உபகரணங்களும் அழிக்கப்பட்டு வருகின்றது. இதனை நிறுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், எதிர்வரும் 23ம் திகதி காலை 10.00 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தினையும், யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையையும் முற்றுகையிட்டு, மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment