August 9, 2015

எமது பாரம்பரியத்தையும் விவசாய பின்புலத்தையும் மாற்றியமைக்க நாங்கள் விரும்பவில்லை – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்!

தொழில் முயற்சிகளில் ஈடுபடவே நாங்கள் விரும்புகின்றோம். பாரிய செயற்றிட்டங்களை வகுத்து தொழிற் பேட்டைகளை உருவாக்கி எமது
பாரம்பரியத்தையும் விவசாய பின்புலத்தையும் மாற்றியமைக்க நாங்கள் விரும்பவில்லை. மேலும் சுற்றுலாத்துறை போன்ற, எமது பாரம்பரியம் கலாசாரம், இயற்கை வளங்கள், சுற்றாடல் போன்றவற்றுக்கு அமைவாக விருத்தி செய்யப்பட வேண்டும் என்பது எமது விருப்பம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்து நகரமாக மாற்றுவதில் முகங் கொடுக்க வேண்டிய சவால்களை அடையாளப்படுத்தும் கலந்துரையாடல், முதலமைச்சர் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தெற்கிலிருக்கும் 7 மாகாணங்களில் இருந்து வடகிழக்கு மாகாணங்கள் வேறுபட்டவை. எமது வடமாகாணம் இலங்கையின் மற்றைய மாகாணங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. வடகிழக்கு மாகாணங்களில் வசிப்பவர்கள் வேற்று மொழியையும் பிறிதான மதங்களையும் கலாசாரத்தையும் கொண்டுள்ளார்கள் என்பதை அவதானத்துக்கு எடுக்க வேண்டும்.
மண்ணியல் ரீதியாகப் பார்த்தால் வட மாகாணம் வித்தியாசமான ஒன்றாகவே இருப்பதை அவதானிக்கலாம். வடமாகாணத்தில் நதிகள் இல்லை. நீர் வீழ்ச்சிகள் இல்லை. கிணறுகளிலும், குளங்களிலும் இருந்து தான் நீர் எடுக்க வேண்டியுள்ளது.
சரித்திர ரீதியாகவும் நாங்கள் வேறுபட்டவர்கள். 2,000 வருடங்களுக்கு மேலான சரித்திரத்தைக் கொண்டவர்கள் எம் மக்கள். தற்பொழுது போரினால் பாதிக்கப்பட்ட ஒரு பிரதேசமாக வடமாகாணம் உள்ளது. காலி, கண்டி போன்ற இடங்களை அபிவிருத்தி செய்வதற்கும் வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கும் இடையில் பல வேறுபாடுகள் இருப்பதை அவதானிக்க வேண்டும்.
அதாவது, முதலில் எமது பிரதேசத்தை இயல்பான நிலைக்கு கொண்டு வர வேண்டும். எம்மைப் பொறுத்த வரையில் அபிவிருத்தி அடையாத, மத்திய அரசினால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பிரதேசமே எமது பிரதேசம் என்பதை உணர வேண்டும்.
பொருளாதார ரீதியாகவும் எமது மாகாணம் சற்று வேறுபட்டது. எம்மைப் பொறுத்த வரையில் விவசாய அடிப்படையிலான பொருளாதார விருத்தியையே நாங்கள் நாடி நிற்கின்றோம். வானளாவும் பாரிய கூட கோபுரங்களும் கட்டடங்களும் எமது சுற்றாடலுக்கு ஏற்றவையல்ல. எமது சுற்றாடலுக்கு அமைவாகவே விருத்தி செய்யப்பட வேண்டும் என்று விரும்புகின்றோம்.
தற்பொழுது வடமாகாணத்தில் இருக்கின்ற எமது மக்கள் குறைவாகவேயுள்ளனர். ஒன்றரை இலட்சத்துக்கு மேல் எமது குடிமக்கள் தென்னிந்தியாவில் முகாம்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் திருப்பி அழைக்கப்பட வேண்டும். அவ்வாறு அழைக்கப்பட்டால் எமது மக்கட் தொகை அதிகமாகும்.
அரசியல் ரீதியாக வடகிழக்கு மாகாணங்கள் தமது தனித்துவத்தை இலங்கை சுதந்திரம் அடைந்த காலந் தொடக்கம் வெளிக்காட்டி வந்துள்ளார்கள். எம்மை பிற மாகாணங்களுடன் சேர்த்துப் பார்த்ததால் எமது தனித்துவம் பாதிப்படைந்தது.
1987ஆம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் 13ஆம் திருத்தச் சட்டம் வட, கிழக்கு மாகாண மக்களுக்காகவே கொண்டு வரப்பட்டது. ஆனால் மாகாண சபைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி எமது தனித்துவத்தை நிலைபெறச் செய்யாமல் பாதிப்புள்ளாக்கி வந்துள்ளன.
தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்கள். 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் தரப்பட்ட குறைவான உரித்துக்களைக் கூட மகாவலி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை போன்ற மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகளுக்கு ஊடாக பிரித்தெடுத்துள்ளனர்.
அரசாங்கத்தினர் எம்முடன் கலந்தாலோசித்து எமக்கான நகர அபிவிருத்தியை ஏற்படுத்தாமல் மத்திய அரசாங்கம் தான்தோன்றித்தனமாக இங்கு தமக்கேற்றவாறு ஏற்பாடுகளை நடாத்தி வருகின்றனர் என்று நான் கருதுகின்றேன். இதனை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எமக்கான அபிவிருத்தியை நாமே உருவாக்க வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என கூறினார்.

No comments:

Post a Comment