August 10, 2015

வீடு என்பது வீடல்ல. வீடு பேறுமல்ல - வினோதரன்!

வீடு
வீடு என்பது வீடல்ல. வீடு பேறுமல்ல. வீட்டை அடைதல் மட்டும் வீடல்ல. வீடு எம் குடும்ப அமைப்பின் அடிப்படை. பண்பாட்டின் குறியீடும் கூட. வீடு எம் முதுசம். வீடு எம் அலகை பாதுகாப்பு செய்யும்.வீடு கட்டுவதும், கல்யாணம் கட்டுவதும் மிக இயல்பானது அல்ல. பொதுவாக வீடு வாஸ்து சாத்திர அடிப்படையில் கட்டப்பட வேண்டும். வாஸ்து என்பது வடமொழி என நிராகரிக்க முடியாது. அதுவும் வேரொடு கலந்த விடயம். ஒற்றை எண் விழ அடிக்கணக்கு எல்லாம் உண்டு . வீட்டுக்கு ஜன்னல்கள் வேண்டும் , கதவும் வேண்டும். நல்ல காற்றும் வந்து போதல் வேண்டும். இது பொது நியதி. மனித எண்ணங்கள் வாய் மூலம் வெளிப்படும். வீடுகளின் சிறப்பு வாசல்கள் மூலம் வெளிப்படும்.
இங்குள்ள வீடு வடக்கு அல்லது கிழக்கு வாசல்களை கொண்டது. தெற்கு வாசல் இங்கு கட்டப்படுவது இல்லை என வைத்து கொள்ளலாம் . ஆக இது நாறசார வீடுமல்ல. சனங்களின் குண மாற்றங்களுடன் நாற்சார குடும்பங்கள் உடைந்து தனியாகின. ஆனால் எல்லோருக்கும் ஒரு வீடு அவசியம். அங்கு நீர்த்தாங்கியும், சங்கட படலையும் இருக்கவில்லை. ஆனால் சனங்களுக்கு வீடு அவசியம். இது எதுவரை அவசியம் ?

எண்பதுகளின் இளையோர் வீட்டை வெறுத்து நாடு என்ற பெரும் இராச கூட்டுக்குள் வந்தனர்.நாடே வீடானது. இங்கு தமிழ் வீட்டை பற்றி கதைக்கும் பேது நம் வளவுகளை மறந்து விடவில்லை. அத்திவாரம் நவரத்திர கற்களும், பஞ்சலோக கற்களும் போட பட்டனவா என நீங்கள் கேட்கலாம் . அதில் நியாயமும் இருக்கலாம் . இப்பவது கற்களை பற்றி பேசுகையில் வீட்டுக்கு குறுக்கே படிகளில் யாரும் வந்து குந்த கூடாது என்பதே முழு நோக்கம். குறுக்கே இருப்பது வீட்டுக்கும் கூடாது. இருப்பவருக்கு அறவே கூடாது. அதை விடுவம்.
வடக்கு வாசலைதள்ளி கிழக்கு வாசல் பூட்டிவிட வீட்டுக்குள் இருந்த பல்லு விழுந்த முதியோர் எந்த சலனமும் அற்று இருந்தனர். வீட்டில் படிப்பகம், கிடப்பகம், தூங்ககம், கழிப்பகம், கருத்தகம், உள்ளகம் வெளியகம் என எத்தனை அறைகள்இருந்தாலும் இந்த பல்லு விழுந்த முதியவர் சிலர் தூங்ககத்தில் ஆழ அறிதுயில் கொண்டனர். அடிக்கடி தெற்கு வாசல் வீட்டு கொண்டாட்டங்களில் உண்டு கொழுத்தனர்.இந்த வீட்டில் எல்லாரும் எல்லாம் செய்வதால் ஆருக்கும் சொந்தமுமல்ல , சொந்தம் கொண்டாட முடியாமலுமல்ல.
கிழக்கு வாசல் சூறாவளிக்கு பிறகு சேலைகளில் சனங்கள் வீடு கட்டினர். தறப்பாள்களுடன் திரிந்தனர். வடக்கு வாசலில் இடப்பெயர்வில் குழைக்காட்டு தென்னோலைகளில் வீடுகள் கட்டி சொந்த வீடு திரும்பும் வரை இதுதான் வீடுகள் என நிர்ணயம் செய்தனர். வீட்டுக்கு வீடு வாசல்படி என வாசிப்பவர் முணுமுணுப்பு காட்ட மாட்டீர்கள் என நம்பலாம் .
பிறகு சனங்களுக்கு ஒரு தறப்பாளையும். நாலைஞ்சு கட்டைகளையும். பத்து ஆணிகளையும் கொடுத்து வீடுகளை உருவாக்குங்கள் என்ற போது சனங்கள் பொறுமையாக காத்தனர். ஆனால் சனங்களுக்கு கட்டப்பட்ட பெரிய கூடு சனங்களிடமில்லை. சனம் நம்பிய அந்த வீட்டுக்குள் திருடர்களும், ஏமாற்றுக்கார நபர்களும், வாடகைக்கும் விடலாம் என கருதுவேரும், எப்போதுமே ஆழ தூங்குவோரும், அலைக்கழிப்போரும் சனங்களை தொடர்ந்தும் ஏமாற்றுவோர் அந்த வீட்டிற்குள் வேண்டுமா ? என்பது சனங்களின் கேள்வி. ஆனால் சனம்
நல்ல தெளிவு.
இப்போது சனங்களுக்கு இந்தியன் வீட்டு திட்டம் கிடைக்க போகிறதாம். அது எந்த அளவும் இல்லையாம். முந்தியும் உலகவங்கி, நோர்வே, ரீஆர்ஆர்ஓ , ஆசிய அபிவிருத்தி வங்கி , கரித்தாஷ் போன்ற அரசு சாராதவையளும் சனங்களுக்கு வீடு கட்டி கொடுத்தவை. ஆனால் சனங்களுக்கு ஆதர்சமான வீடுகள் அவையல்ல. வெறும் மறைப்புகள் தானே.
என்பதும் எமது சனங்களின் நோக்கமும் அல்ல.
இப்போது உள்ள வீடு அத்திவாரம் இல்லாத வீடு. அத்திவாரம் இல்லாத வீடு வீடல்ல. அது சில்லுகள் பூட்டப்பட்டது. உருட்டக்கூடியது. ஆனால் தானாக உருள முடியாத து. ஆரும்
உருட்டலாம். எப்படியும் உருட்டலாம் . சிலர் உருட்டி கொண்டு போய் கிழக்கு வாசல்ல விடுகினம். கொஞ்சபேர் இழுத்து கொண்டு போய் இந்தியாவிலை விடுகினம். மற்றும் சிலர் ஐரோப்பிய கொண்டு போகினம். பிறகு திருப்பி இழுத்து தங்கட பக்கம் கொண்டு வருகினம். சனங்கள் பாத்து பாத்து ஏம்பலிச்சு நிக்குதுகள் . சனத்துக்கு தெரியுமே இது ஒரு அத்திவாரம் இல்லாத வீடெண்டு!
சில்லு இருக்கிறதால தேருமல்ல தேர்தல் வாகனமும் அல்ல என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேணும். வீடு வீடு வீடே தான் !
வாசல்கள் வீட்டுக்கு முக்கியம் தான் அது வடக்கு வாசல் கிழக்கு வாசல் கதைச்சுக்கொண்டு சுத்தி இருக்கிற அழகிய பச்சை மரங்களையும் கவனத்தில் கொள்ள வேணும். மரங்கள்அற்ற வெட்டை வீட்டை கட்டவே முடியாது. மரங்களை நாட்ட என்ன திட்டம் வீட்டுகார்ர்களுக்கு உண்டு?
சனத்தை எல்லாரும் அம்பிளி மாமா கதையள் சொல்லி ஏமாத்துகினம். இந்த முறை சனம் தங்கட தங்கட வீட்டை விட்டு வெளியில வரவேணும். அப்ப தான் ஏதாவது நடக்கும். இனி இந்த வீட்டை இடிச்சும் கட்டேலாது. அந்தளவு பாதகமா இடிஞ்சு போச்சுது.
இந்த முறை எல்லாரும் வெளியே வந்தால் தான் வீடு வீடாகும். அல்லது வீடு பேறாகும்.

வினோதரன் .

No comments:

Post a Comment