June 4, 2015

உலக தவில் மேதையின் இறுவெட்டு சுவிஸில் வெளியீடு!

உலகத் தவில் மேதை தவில் சக்கரவர்த்தி லய ஞான குபேர பூபதி அளைவயூர் வி.தெட்சிணாமூர்த்தியின் கச்சேரிகள் அடங்கிய 11 மணித்தியாலங்களான இறுவட்டு வெளியீடு நேற்று ( 29.05.2015) சுவிஸ் செங்காலன் சென்மார்க்கிரெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

ஆலயத்தில் நடைபெற்று வரும் வருடாந்த மகோற்சவத்தில் சிறப்பு அம்சமாக இந்த வெளியீட்டு நிகழ்வு ஆலயத்தின் தலைவர் திரு.வே.கணஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.
லண்டனில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட வி. தெட்சிணாமூர்த்தியின் பிரபல கச்சேரிகள் அடங்கிய 11 மணிநேர இறுவட்டை சுவிசில் வாழும் தட்சிணாமூர்த்தியின் உறவினரான வடிவேலு சந்திரமோகன் அதை ஆலயத்தில் வெளியிட்டுவைத்தார்.
முதல் இறுவட்டை ஆலயத்தின் தலைலவர் திரு.வே.கணேஷ் குமார் சந்திரமோகனிடம் பெற்று வைபவரீதியாக வெளியிட்டு வைத்தார்.
ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ பா. ஜோதினாக்குருக்கள் சிறப்புப் பிரதி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் விசேட நிகழ்வாக இணுவையூர் தவில் மேதை K.R.புண்ணியமூர்த்தியின் மகனான சுவிசில் வசிக்கும் தவில் மேதை பு.கலைச்செல்வன், அளவையூர் நாதசுர மேதை அமரர் பல்லவி ராசதுதரயின் மகனான ஜேர்மனியில் வசிக்கும் தவில் மேதை இ.கலைச்செல்வன், சுவிசில் வசிக்கும் தவில் மேதை S.M. மகேந்திரமணி ஆகியோரின் சிறப்பு தவில் கச்சேரி இடம்பெற்றது.
நல்லூர் பிரபல தவில் மேதை மார்கண்டுவின் மகனான செந்தூரனின் நாதஸ்வரக் கச்சேரியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட சிவத்தமிழ்காவலர் சிவநெறிச்செல்வர் ஆ.செந்தில்நாதன் உரையாற்றுகையில் உலகத் தவில் மேதை தெட்சிணாமூர்த்தியின் வித்துவத் திறமை தொடர்பாக தான் நேரில் கண்ட அனுபவங்களை நினைவுபடுத்தினார்.
அவர் ஓர் அபூர்வ கலைஞர் தனது கலைத்திறன் மூலம் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் ஈழத்திருநாட்டிற்கே புகழ் சேர்த்தவர் என்றும் குறிப்பிட்டார்.
செந்தமிழ் வித்தகர் லக்ஸ்மன் உரையாற்றுகையில் உலகிலுள்ள ஏழு அதிசயங்களில் தெட்சிணாமூர்த்தியின் கலைத்திறனும் உள்ளடக்கபடவேண்டும் அத்தகைய அதிசயப் பிறவி என்றார்.
ஸ்ரீ விஸ்ணு துர்க்கையம்மன் ஆலய பிரதமகுரு சரஹணபவானந்தக்குருக்கள் அவர்களும் தெட்சிணாமூர்த்தியின் வித்துவத்திறமை பற்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு தெட்சிணாமூர்த்தியின் இறுவட்டை ஆர்வத்துடன் பெற்றனர்.

No comments:

Post a Comment