May 12, 2015

யாழ். மண்டைதீவு பகுதியில் குடிதண்ணீர் இல்லை! (படங்கள் இணைப்பு)

யாழ். மண்டைதீவு பகுதியில் மக்களுக்கான குடிநீர் விநியோகம் உரியமுறையில் இடம்பெறாமையினால் குடிப்பதற்கும், சமைப்பதற்குமான நீர் எடுப்பதற்கு 6 கிலோ மீற்றர் பயணம் செய்து யாழ் நகர் பகுதிக்கு வந்து மக்கள் குடிநீர் எடுத்துச் சென்று கொண்டிருக்கும் நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மௌனமாக இருப்பதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குடாநாட்டில் தீவுப்பகுதிகள் மிககடுமையான குடிநீர் தட்டுப்பாட்டினை எதிர்நோக்கியிருக்கின்ன. இந்நிலையில் மண்டைதீவு பகுதியிலும் மக்கள் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றனர்.

குடிநீர் விநியோகம் செய்யப்படும் குடிநீர் குழாய்களின் முன்னாள் தினசரி நீண்ட வரிசைகளில் நீர்த் தாங்கிகளை வைத்துவிட்டு கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் குடிநீருக்காக காத்து நிற்கும் நிலையில் பல சமயங்களில் காத்திருந்தும் குடிநீர் கிடைக்காமல் வெற்று நீர் தாங்கிகளுடன் மக்கள் வீடுகளுக்கு திரும்பும் நிலையும் உள்ளதாக மக்கள் கவலையோடு கூறுகின்றனர்.

இந்நிலையில் மேற்படி பகுதிக்குச் சென்று மக்களுடன் விடயம் தொடர்பாக பேசியபோது, மக்கள் கவலையோடு இப்படி கூறினார்கள். மண்டைதீவு 1ம் வட்டாரம், 2ம் வட்டாரம் ஆகிய பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகின்றது.

இதற்காக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக அல்லைப்பிட்டி பகுதியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் நாங்கள் மாதாந்தம் 50 ரூபா கட்டணம் செலுத்தி குடிநீரை பெற்றுக் கொள்கின்றோம்.

ஆனாலும் பல சமயங்களில், உரியவாறு நீர் கிடைக்காத நிலையே உள்ளது. குறிப்பாக கடந்த 4 தினங்களாக எங்களுடைய பகுதிக்கு குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை. இதற்கு அல்லைப்பிட்டி பகுதியில் மின்சாரம் தடைப்பட்டதாகவும், மின் விநியோகத்தில் கோளாறு உருவானதாகவும் காரணம் சொல்லப்படுகின்றது.

இதனால் 4 நாட்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் நீர் இல்லை. இந்தப் பகுதியில் 40 தொடக்கம் 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமக்கு அருகில் வேறு நன்னீர் கிணறுகளும் இல்லை. இந்நிலையில் 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்களும் குடிப்பதற்கும், சமைப்பதற்கும் நீர் இல்லாத நிலையில் எவ்வாறு வாழ்வது? அல்லைப்பிட்டியிலிருந்து மற்றய பகுதிகளுக்கு ஊடாக எங்களுடைய 1ம், 2ம் வட்டா ரங்களுக்கு நீர் வருகின்றது.

இதனால் மற்றய வட்டாரங்களில் உள்ள மக்கள் நீர் எடுத்தது போக இறுதியாக இருக்கும் எங்களுடைய பகுதிக்கு நீர் வரும்போது மிக மிக குறைந்தளவு வேகத்திலேயே தண்ணீர் குழாய்களில் வருகின்றது.

இதற்கிடையில் இந்த குடிநீர் விநியோகம் அரை மணித்தியாலம் தொடக்கம் ஒரு மணித்தியாலங்கள் வரையில் மட்டுமே நடக்கின்றது. அதைவிட மோசமான விடயம் எப்போது தண்ணீர் வரும், எப்போது நிறுத்தப்படும் என்பது ம் கூட எங்களுக்கு சரியாக தெரியாது.

சில வேளைகளில் இரவு நேரங்களில் கூட தண்ணீர் வருகின்றது. ஆனால் வந்தும் அதனால் பயனில்லை. ஏனெனில் மக்களுக்கு அது தெரியாது. மேலும் குழாய்களில் தண்ணீர் வரும் வேகத்திற்கு அவர்கள் கொடுக்கும் அரை மணி நேரத்தில் ஒரு நீர் தாங்கியை மட்டுமே நிரப்பிக் கொள்ள முடியும். 10 லீற்றர் நீர்தாங்கி 50 குடும்பங்களக்கு போதுமானதா? இந்த நிலையில் சற்று வசதி படைத்தவர்கள் யாழ்ப்பாணம் நகர் பகுதிக்குச் சென்று நீர் எடுத்து வருகின்றார்கள்.

ஆனால் வசதியற்ற மக்கள் எப்படி? நீர் பெற்றுக் கொள்ள முடியும்? சில சமயங்களில் தண்ணீர் தாகம் தாங்கமுடியாமல், நாங்கள் உப்பு தண்ணீரை குடித்த சம்பவங்களும் உண்டு. ஒவ்வொரு நாளும் தண்ணீருக்காக காத்திருந்து வெற்று நீர் தாங்கிகளுடன் வீடுகளுக்குச் செல்கின்றோம்.

இந்தப் பிரச்சினையை பொறுப்புவாய்ந்தவர்கள் கவனத்தில் எடுத்து எமக்கு உரியவகையில் குடிநீர் பெற்றுக் கொடுப்ப தற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment