April 20, 2015

இடம்பெயர்ந்த நிலையில் அலைகின்றனர் பரவிப்பாஞ்சான் கிராம மக்கள்! மீளக்குடியேறுவது எப்போது?

சொந்தக் காணிகளில் மீளக்குடியேறுவது எப்போது என்று காத்திருக்கும் பரவிப்பாஞ்சான் கிராம மக்கள்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் வடக்கில் மக்களிடம் காணிகள் கையளிக்கப்பட்ட போதிலும் மேலும் பல பகுதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளமை கவனத்திற்குரியது.

தமது சொந்த வாழ்விடங்களை இழந்து மக்கள் படும் அவலம் சொல்லில் அடங்காதது.

சொந்தக் காணிகளில் மீளக் குடியேற வேண்டும் என்ற கனவோடு பரவிப்பாஞ்சான் கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.

சொந்த நிலத்தை பிரிந்து, வாழ்ந்த வீடுகளை இழந்து அலைவது என்பது மிகவும் துயரமானது.

வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து மீள்குடியேற்றத்திற்காய் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் அழைத்து வரப்பட்ட பரவிப்பாஞ்சான் கிராம மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்த நிலையில் அலைகின்றனர்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் கிராமத்தின் சில பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

நண்பர்களின் வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் காலத்தை கழிக்கும் இந்த மக்கள் வெயிலிலும் மழையிலும் அலைகின்றனர்.

இன்று விடுவார்கள் நாளை விடுவார்கள் என்று 5 வருடங்களாக காத்திருக்கும் இந்த மக்கள் பலதரப்பட்டவர்களிடமும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வருகின்றனர்.

அண்மையில் கிளிநொச்சிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் மேற்கொண்டவேளையிலும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கிராம மக்கள் வலியுறுத்தினர்.

கடும் வெப்பம் மிகுந்த காலநிலையில் பெரும் அசெளகரியத்தின் மத்தியில் வாழ, தாம் நட்ட பலன்தரு மர நிழல்களில் வேறு சிலர் சுவாத்தியமான வாழ்வினை முன்னெடுப்பதாகவும் மக்கள் ஆதங்கமுறுகின்றனர்.

காணிகளில் பலன்தரு மரங்களில் கிடைக்கும் வருமானத்தினை பெற்று தம்மால் குடும்ப செலவினை முன்னெடுக்ககூடிய நிலையிருந்தும் அவற்றை இழந்து வாடகை வீட்டில் வசிப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

ஊருக்குத் திரும்பி நிம்மதியுடன் வாழ வேண்டும் என்ற பரவிப்பாஞ்சான் மக்களின் ஏக்கம் நிறைவேற வேண்டும், காத்திருப்பு கைகூடவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment