April 27, 2015

டுபாயில் இலங்கை பிரஜை இத்தாலி செல்ல விமான நிலையத்தில் கைது !

வேறு ஒருவரின் கடவுச்சீட்டையும் வீசாவையும் பயன்படுத்தி டுபாய் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த இலங்கை பிரஜை ஒருவர் டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு திருப்பிய அனுப்பிய நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
34 வயதான சந்தேக நபர் நாரம்பல பிரதேசத்தை சேர்ந்தவர் என விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தாலியில் வசிக்கும் இவரது உறவினர் ஊடாக கேகாலை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீசாவுடன் கூடிய கடவுச்சீட்டை சந்தேக நபர் பெற்றுள்ளார்.
கேகாலையை சேர்ந்த இளைஞரின் சகோதரர் அவருக்கு இத்தாலிக்கு செல்வதற்கான வீசாவை அனுப்பி வைத்திருந்தார். திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவரால் இத்தாலிக்கு செல்ல முடியாது போயுள்ளது.
இதனையடுத்து வீசாவுடன் கூடிய அவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை சந்தேக நபர் பெற்றுக்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இத்தாலிக்கு சென்று சேர்ந்த பின்னர், 6 லட்சம் ரூபா தருவதாக கூறி சந்தேக நபர் இந்த ஆவணங்களை பெற்றுள்ளார்.
கடந்த 24 ஆம் திகதி சந்தேக நபர் இலங்கையில் இருந்து இத்தாலி சென்றுள்ளார். டுபாய் விமான நிலையத்தில் சந்தேக நபரின் ஆவணங்களை பரிசோதித்துள்ள அதிகாரிகள் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்படும் முதல் கட்ட விசாரணைகளின் பின்னர் அவர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

No comments:

Post a Comment