April 20, 2015

தேர்தல் முறை மாற்றம்: கொழும்பில் சிறிய கட்சிகள் கூடி ஆராய்வு!

தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு சிறுபான்மை கட்சிகள் எதிர்புத் தெரிவித்துள்ள அதேவேளை, தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்ந்து ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றினை அமைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற சிறுபான்மை கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே மேற்குறித்த முடிவு எட்டப்பட்டது.
இக்கலந்துரையாடலில் தூய்மையான நாளை அமைப்பின் தலைவர் ரத்னா தேரர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், அமைச்சர் பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன, விருப்பு வாக்கு முறையை இல்லாமல் செய்து, விகிதாசார தேர்தல் முறையை அமுல்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.
அதேபோன்று தேர்தல் முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுவதற்கு சிறுபான்மையின கட்சிகளின் ஆதரவு அவசியம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும் விருப்பு வாக்குமுறைமையுடன் இணைந்த விகிதாசார முறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது கோரியை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment