“எங்களின் வீடுகளையும், கோயில்களையும் அழித்து சிறீலங்கா இராணுவம் விகாரைகளைக் கட்டி வைத்திருக்கிறது. எங்களின்காணிகளைப் பார்க்க விடாமல் இடையிலேயே மறித்து முள்கம்பி வேலி அமைக்கின்றனர். முகாம்கள் இருக்கிற வீடுகள் மட்டுமே இருக்கின்றன. மற்ற வீடுகள் இருந்த இடம்கூட தெரியவில்லை”
– இவ்வாறு வயாவிளான் பகுதியை இன்று வெள்ளிக்கிழமை பார்வையிட்டுத் திரும்பிய மக்கள் தெரிவித்தனர்.
உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் ஆயிரத்து 100 ஏக்கர் காணி விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் வலி. கிழக்குப் பிரதேசமான வளலாயில் 233 ஏக்கர் காணி கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை 197 ஏக்கர் காணி வயாவிளான் கிழக்குப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
முன்னதாக இப்பகுதியில் 223 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதும் 197 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட தங்களின் காணிகளைப் பார்க்க பெருமளவிலான மக்கள் அப்பகுதிக்கு சென்றிருந்தனர்.
விடுவிக்கப்பட்ட காணிகளில் இருந்த வீடுகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. அத்துடன் அப்பகுதிகள் புதர்கள் மண்டியும் காணப்பட்டன.
தவிர அப்பிரதேசங்களில் சில வீடுகள் மட்டுமே அழிக்கப்படவில்லை. ஆனால் அந்த வீடுகளில் இராணுவத்தினர் முகாம்களை அமைத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் மக்களின் கண்முன்னேயே வேலிகளை அமைக்கும் பணிகளில் சிறீலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டனர்.
காணிகளைப் பார்க்க ஆவலுடன் சென்ற மக்கள் எல்லைக்கு அப்பால் இருக்கும் தங்கள் காணிகளைப் பார்க்க சிறீலங்கா இராணுவத்தினரிடம் அனுமதி கோரினர். ஆனால் இதற்கு சிறீலங்கா இராணுவத்தினர் மறுப்புத் தெரிவித்து விட்டனர். இதனால் சிறீலங்கா இராணுவத்தினருடன் மக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
நிலங்களைப் பார்வையிடச் சென்ற மக்களில் சிலர் கண்ணீருடன் தங்கள் நிலத்தின் மண்ணைத் தொட்டு அள்ளிய காட்சி பலரின் மனதையும் உருகச் செய்தது.
No comments:
Post a Comment