March 20, 2015

டக்ளஸ் - சுமந்திரன் - மனோ கூட்டு, கொழும்பில் இரகசிய பேச்சு (படம் இணைப்பு) !

தமிழ் - முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குகின்ற பகீரத முயற்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஈடுபட்டு உள்ளார் என்று கொழும்பில் இருந்து கிடைக்கின்ற செய்திகள் கூறுகின்றன.

இம்முயற்சிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூரண ஆதரவு வழங்குகின்றார் என்றும் தெரிகின்றது.
இது சம்பந்தப்பட்ட ஆரம்ப சந்திப்பு அமைச்சர் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தில் அண்மையில் இடம்பெற்று உள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றோடு, நேச சக்திகளாக ஜே. வி. பி, நவ சம சமாய கட்சி ஆகியனவும் இச்சந்திப்பில் கலந்து கொண்டன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தலைவர் ஹக்கீமுடன் கட்சியின் செயலாளர் நாயகமும், இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி, கல்முனை மாநகர சபை முதல்வர் நிசாம் காரியப்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எம். பி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ. சுமந்திரன் கலந்து கொண்டார்.
ஜனநாயக மக்கள் முன்னணி சார்பாக தலைவர் மனோ கணேசனும், நவ சம சமாய கட்சி சார்பாக தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவும், ஜே. வி. பி சார்பாக தலைவர் அனுர குமார திஸநாயக்கவும் கலந்து கொண்டார்கள்.
கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ணவை அழைத்து வருகின்றமையில் மனோ கணேசன் முன்னின்று செயற்பட்டு இருக்கின்றார். இதே போல சுமந்திரனை அழைத்து வருகின்ற பொறுப்பு நிசாம் காரியப்பருக்கு வழங்கப்பட்டு இருந்தது. ஏனென்றால் இருவரும் சட்டத்தரணிகள் என்கிற வகையில் மிக நெருக்கமானவர்கள்.
தேர்தல் சீர் திருத்தம் தொடர்பாகவே சந்திப்பு இடம்பெற்றது என்று வெளியில் கூறப்படுகின்றது. ஆனால் உள்ளே பேசப்பட்ட விடயங்கள் மூடுமந்திரமாகவே உள்ளன.
இச்சந்திப்பில் பங்கேற்ற கட்சிகள் எதுவுமே இது சம்பந்தமாக இது வரை அறிக்கை எதுவும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment