June 24, 2014

தமிழீழ விடுதலைக்கான முதன்மைத் தளமாக தமிழகமே உள்ளது! - இசைப்பிரியா !

நான் தோற்றுப் போகலாம், அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல’ என்பது உலகம் போற்றும் புரட்சியாளன் சே குவேரா அவர்களது வார்த்தை. வெற்றி என்பது தோல்விகளின் நடுவேதான் உள்ளது. முடியும் என்ற நம்பிக்கையே உலகை இந்த அளவு தூரத்திற்கு நகர்த்தி வந்திருக்கின்றது. ‘முடியாது என்ற வார்த்தையை அகராதியிலிருந்தே அகற்ற வேண்டும்’ என்றார் மாவீரன் நெப்போலியன்.
நாங்கள் எதை நோக்கிப் பயணிக்க விரும்புகின்றோமோ, அதன்மீது அசையாத நம்பிக்கையும், விடா முயற்சியும் தொடர வேண்டும். அதனையே தேசியத் தலைவர் அவர்களும் எமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார். அதுவே, இத்தனை பேரவலங்களுக்குப் பின்னரும், ஈழத் தமிழினத்தை எழுந்தே நிற்க வைத்துள்ளது. இன்றைய நாட்களில். அதுவே சிங்கள தேசத்திற்கும் பலத்த சவால்களை உருவாக்கி வருகின்றது.
அதுவும், புலம்பெயர்ந்த தமிழர்களது தமிழீழ விடுதலை குறித்த தளர்வற்ற நிலைப்பாடு சிங்களத்தின் அதியுச்ச கரிசனைக்குள்ளாகியுள்ளது. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையுடன் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. ஓர் இன அழிப்பினூடாக, விடுதலைப் புலிகளது போர் வலு நிர்மூலமாக்கப்பட்டிருந்தபோதும், அவர்களது இலட்சியம் இன்னொரு படிமானத்தில் நிலைபெற்றுவிட்டது. அவர்களது நியாயங்களும், அவர்களுக்கான நியாயங்களும் இப்போது உலகத்தின் நீதிச் சபைகளின் கதவைத் திறந்து உள்நுழைந்துவிட்டன.
ஓர் இன அழிப்பினூடாகப் பெற்ற முள்ளிவாய்க்கால் போர் வெற்றியை மகாவம்சத்தின் தொடர்ச்சியாகப் பதிவு செய்த சிங்கள இனவாதம், அதைத் தக்க வைப்பதற்காக இப்போதும் பல கள முனைகளில் போராட வேண்டிய கட்டாயத்தினுள் தள்ளப்பட்டுள்ளது. ஒரு புறத்தில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் போர்க் குற்ற விசாரணை சிங்கள ஆட்சிபீடத்தை ஆட்டிப்படைக்கும் நிலையில், இந்தியாவின் ஆட்சி மாற்றம் சிறீலங்கா ஆட்சியாளர்களைப் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுவும், தமிழகத்தில் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ள தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களது நீதிக்கான தீர்மானங்கள் சிங்கள இனவாதத்தின் கோபத்தை அதிகரிக்க வைத்துள்ளது. கடந்த வாரம், கொழும்பில் நடைபெற்ற இதற்கான ஆர்ப்பாட்டம் ஒன்றில், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களது உருவப்படம் தீயிடப்பட்டது.
பழிவாங்கும் ஒற்றைச் சிந்தனையுடன் செயற்பட்ட சோனியாவின் தெரிவான மன்மோகன் சிங்கைக் கையாண்டது போல், தற்போதைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியைக் கையாள முடியாது. அதற்குப் பெரும் தடையாக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தமிழீழ மக்கள் குறித்த தீர்மானங்கள் உள்ளன. 2009 மே 18 இன் பின்னரான தமிழீழ மக்களது வரமாகவே அது கருதப்படுகின்றது.
தமிழீழ மக்கள் தங்கள் கருத்துக்களையோ, விருப்பங்களையோ வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாத இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான அரசியல் தலைமையோ, தங்களுக்குச் சேதாரமற்ற வழிமுறைகளில், பாதுகாப்பான அரசியல் நகர்வுக்குள் தமிழீழ மக்களது தேசிய அபிலாசைகளைப் புதைத்து விடும் முயற்சியையே மேற்கொண்டு வருகின்றார்கள்.
குழப்பங்கள் தீராத புலம்பெயர் தமிழ்த் தேசிய களங்களில் சரியான திசையில் பயணிக்கும் அமைப்புக்களும் தவறானவர்களது விமர்சனங்களை எதிர்த்தும் போராட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் உள்ளார்கள். ஆங்கிலேயர் காலத்து ஆள் பிடிக்கும் பாணியில், புலம்பெயர் தமிழர்களை சிங்கள ஆட்சியாளர்கள் பக்கம் சாய்க்கும் முயற்சியும், டெல்லிப் பக்கம் கரையதுங்க வைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படுகின்றது. சரணாகதி அரசியல் ஒன்றே சாத்தியம் என்ற வேதமும் ஓதப்படுகின்றது. அதிகார பலமற்ற புலம்பெயர் தளங்களில் நடாத்தப்படும் ஜனநாயக முறைமைப் போராட்டங்களும் ஒரு எல்லை தாண்டிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. மேற்குலகின் விருப்பங்களுக்குள் மட்டுப்படுத்த முயலும் போராட்ட தளங்கள் மக்கள் மத்தியில் பலத்த விமர்சனங்களையும், கொந்தளிப்புக்களையும் உருவாக்கி வருகின்றது.
தற்போதைய சூழ்நிலையில், தமிழகத்தின் தமிழ்த் தேசிய எழுச்சி உணர்வலைகளும், அதன் பிரதிபலிப்புக்களுமே தமிழீழ விடுதலைக்கான முதன்மைத் தளமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளது. தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களது முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய நிலைப்பாடு தமிழீழ விடுதலைத் தளங்களால் வரவேற்கப்பட வேண்டியதே. இந்த சாத்தியமான சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் தமிழீழ விடுதலையை நேசிக்கும், யாசிக்கும் அனைவருக்கும் உள்ளது.
தலைமைக் கனவில் மிதப்பவர்களுக்கு இது கசப்பானதாக இருந்தாலும், தமிழீழ மக்களுக்கான நீதியும், தீர்வுமே இதில் முதன்மைப்படுத்த வேண்டியதாகும். இந்திய மத்திய அரசிடம் சரணாகதி அடையாமல், தமிழீழ விடுதலையை பிராந்திய அரசியலுக்குள் சமரசம் செய்து கொள்ளாமல், தமிழீழ மக்களது விருப்பங்களை நிறைவேற்றும் பாரிய கடமையை யாரும் உதாசீனம் செய்ய முடியாது. தமிழீழ மக்களுக்கான வரலாற்றுச் சந்தர்ப்பத்தினை யாரும் தவறவிட்டுவிட முடியாது.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களது முன்மொழிவுகளுக்குப் பலம் சேர்க்கும் விதத்தில், தமிழீழ மக்களே தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் பொது வாக்கெடுப்பிற்கான கோரிக்கையை அனைத்துத் தளங்களிலும் வலியுறுத்திப் போராட்டங்களை ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில், தமிழீழ விடுதலைக்கான முதன்மைத் தளமாக தமிழகமே உள்ளது!
 நன்றி: ஈழமுரசு

No comments:

Post a Comment