August 7, 2016

விடுதலையைத் துரிதப்படுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! - கூட்டமைப்பிடம் அரசியல் கைதிகள் கோரிக்கை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது விடுதலையை அரசாங்கம் தாமதப்படுத்தும் பட்சத்தில் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமது விடுதலை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி மற்றம் பிரதமருடன் கலந்துரையாட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.


 
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போதே தமது விடுதலையை துரிதப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என அரசியல் கைதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சர்வதேசத்தையும் மக்களையும் ஏமாற்றும் வகையிலேயே தம்மை விடுதலை செய்வதற்காக அரசாங்கம் விசேட நீதிமன்றங்களை அமைக்கின்ற போதிலும் அது காலத்தை கடத்தும் செயற்பாடு என அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் எந்தவித மாற்றங்களும் இடம்பெறவில்லை தெரிவித்த அரசியல் கைதிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கையளிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் சமர்ப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment