August 19, 2016

கொக்கிளாயில் விகாரை அமைப்பதில் என்ன தவறு? வடக்கில் இந்துக்கோயில்களைவிட விகாரைகள் குறைவு!வடக்கு மாகாண ஆளுநர்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியில்  அடாத்தாக விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
குறித்த விகாரை அமைப்பு வேலையை உடனே நிறுத்தி, தன்னுடைய காணியை மீள வழங்குமாறு காணி உரிமையாளர் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையிலும் ஆராயப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த விகாரை  தொடர்பான சிக்கலை ஆராய்வதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியிருந்தார். நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ்விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது கொக்கிளாயில் விகாரை அமைப்பதில் என்ன தவறு? என்று பதிலுக்குக் கேள்வி எழுப்பினார்.

கொக்கிளாயில் பௌத்த விகாரையை  அமைக்க பிரதேச செயலகம் அனுமதியளித்துள்ளது என்று தெரிவித்த ஆளுநர், குறித்த விகாரைக்கு எதிரான நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் மீளப்பெறப்பட்டுள்ளதாக கூறினார். அரச அனுமதியுடனேயே விகாரை அமைக்கப்படுவதாகவும் சட்ட விரோதமாக அமைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த பகுதிக்கு அண்மையில் 250 சிங்கள மீனவக் குடும்பங்கள் வசிப்பதாக தெரிவித்த அவர் வடக்கில் 13 விகாரைகளே உள்ளன என்றும் ஆனால் ஏராளமான இந்துக் கோயில்களும் கிறிஸ்தவ ஆலயங்களும் உள்ளன என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் நாம் மகிழச்சியடைவதாகவும் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment