August 16, 2016

நல்லிணக்கத்துக்கு உதவத் தயார்! - யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதுவர் !

தமிழ் மக்களுடன் தொடர்புடைய நல்லிணக்க செயற்பாடுகளை முறையாக அமுல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராகவுள்ளதாகவும்,
அதற்காக இலங்கை அரசாங்கத்தை மிகவும் அவதானமாக கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்தார்.

 
யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு 'ஒப்பரேஸன் பசுபிக் ஏஞ்சல் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் அமெரிக்காவுக் கும் இடையிலான தொடர்பு வரலாற்று முக்கியமிக்கதாகும் அதனைவிட அமெரிக்க மக்களுக்கும் யாழ். மக்களுக்கும் இடையிலான உறவு 200 ஆண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது. 1832ஆம் ஆண்டிலிருந்து பல அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் அனைத்திற்கும் அமெரிக்கா பல் வேறு உதவிகளை வழங்கி வந்துள்ளது.

இது நான் யாழ்ப்பாணத்துக்கு மேற்கொள்ளும் ஏழாவது விஜயமாகும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களின் துன்பங்களையும் அவர்கள் பட்ட வேதனைகளையும் நான் அறிவேன். உண்மையைக் கண்டறிதல், நல்லிணக்கம், பொறு ப்பு கூறல் என்பன இம்மக்கள் சந்தித்த இழப்புக்களை மீளத்தர முடியாது. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள புதிய இலங்கைக்கான முன்னெடுப்புக்கள் எதிர்காலத்தை நோக்கிய நகர்வுகளுக்கு அத்திபாரம் இடும்.

உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒருமித்த வகையில் செயற்பட வேண்டும். அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க நாம் தயாராகவுள்ளோம். இலங்கை முழுவதிலும் வாழும் மக்களின் சிறந்த நல்வாழ்வுக்கான அடிப்படைகளை கண்டறிய வேண்டும். இந்நிலையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதி க்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அவர்களது உடல் உள பாதிப்புக்களை நிவர்த்திக்கும் முகமாக செயற்பட்ட அமெரிக்கப் படையினரின் உதவிகளும் மறக்கப்பட முடியாதவை.

அத்தோடு தற்போதைய நல்லா ட்சி அரசாங்கத்தில் நல்லிணக்க த்தை ஏற்படுத்துவதற்கான ஒரு தெளிவான பாதை தோற்றம் பெற்றுள்ளது. நீதிக்கமைவாக அனைத்து மக்களும் சுதந்திரமாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்படுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நல்லாட்சி அரசாங்கம் பொறுப்பேற்ற 19 மாத காலப்பகுதிக்குள் ஊடகச் சுதந்திரம், சுதந்திரமான சிவில் சமூகம், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முன்னெடுப்புக்கள் போன்றவற்றில் பல சவால்களையும் சாதகமான நகர்வுகளையும் வெளிக்காட்டியுள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் ஒரு சமூகம் மீள எழுந்து செயற்படக் கூடிய ஆற்றலில் இலங்கை அரசாங் கம் ஏனைய நாடுகளுக்கு உதாரணமாக விளங்குகின்றது என்பதில் ஐய மில்லை.

ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் ஆணையாளர் கடந்த வருடத்தில் ஐ.நா.வில் மேற்கொள்ளப்பட்ட நல்லிணக்கம், மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் எந்த அளவு தூரம் செயற்படுத்தியுள்ளது என்பதனை ஆராய்ந்து அறிக்கையிட்டிருந்தார்.

அந்தவகையில் நாம் நல்லாட்சி அரசாங்கத்தில் சாதகமான நகர்வுகளுக்கு எப்போதும் உறுதியான பங்களிப்பை வழங்குவோம். ஆனால் இது கடினமான செயற்பாடாக உள்ளபோதும் தற்போதைய சூழ்நிலையில் அவசியமான தேவையாக உள்ளது. இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக நாம் எப்போதும் பக்கபலமாக இருப்போம். மேலும் யுத்தத்தின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகளை மீள கையளிக்கும் செயற்பாடுகளில் இலங்கை அரசாங்கம் செயற்படும் விதம் பாராட்டத்தக்கது.

கடந்த வாராத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமல்போனோர் அலுவலகம் தொடர்பிலான சட்டமூலத்தில் ஊடாக காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம் மற்றும் உண்மையை கண்டறிதல் நீதித்துறை பொறிமுறை, யுத்த குற்றங்களை கண்டறிதல் பயங்கர வாதச் சட்டத்தினை நீக்குதல் ,பாதுகாப்பு படையினரை அகற்றுதல் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடுகளை இல்லாமல் ஆக்குதல், சிவில் சமூகம் ஊடகங்களை சுதந்திரமாக செயற்பட விடுதல், சமாதானத்தை உருவாக்குதல் போன்ற அத்தியாவசியமான தேவையாக உள்ளது. இலங்கையின் நல்லிணக்கத்துக்கான நோக்கத்தை அடையச் செய்வதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு எப்போதும் இருக்கும் அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம் என்றார்.




No comments:

Post a Comment