August 17, 2016

மீண்டும் யானைக்கால் நோய் பரவும் அபாயம்!

இலங்கை யானைக்கால் நோயினை முற்றாக ஒழித்த நாடாக சுகாதார அமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காலி மாவட்டத்தின் 20 சுகாதார தொகுதிகளில் 11 கடலோரப் பகுதிகளில் இன்னும் யானைக்கால் நோயாளர்கள் இருப்பதாக யானைக்கால் நோய் ஒழிப்பு அமைப்பின் பணிப்பாளர் வைத்தியர் தேவிகா மென்டிஸ் தெரிவித்துள்ளார்.


அதற்கமைய இந்துருவ, பலபிட்டிய, அம்பலாங்கொட, கோனபினுவல, ரத்கம, காலி மாநகர சபையின் ஹபராதுவ, இமதுவ, அக்மீமன, போபே பொத்தல ஆகிய பகுதிகளிலும் இவ்வாறு யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பகுதிகளில் இந்த வருடத்தில் இதுவரை 87 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகமானோர் பலபிட்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இந்த பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக இரவு நேரங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பொதுமக்களின் இரத்தமாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், இதில் 12000 பேரினது இரத்தமாதிரிகள் சோதனை செய்யப்பட்ட போது 60 பேருக்கு யானைக்கால் நோய் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் வைத்தியர் தேவிகா மென்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த கடலோரப் பகுதிகளில் யானைக்கால் நோய் பரவுவதற்கான காரணம் அங்கு யானைக்கால் நோயினை பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்திற்கு ஏதுவான நீர் மற்றும் உஷ்ணநிலையே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை காலி மாவட்டங்களில் யானைக்கால் நோயினை ஒழிப்பதற்காக 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் இங்குள்ள பொதுமக்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டதாகவும், குறித்த மாத்திரையினை இவர்கள் அருந்தவில்லை என தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காலி மாவட்டத்தில் இருந்து யானைக்கால் நோயினை முற்றாக ஒழிப்பதற்கான விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் மாத்திரைகளை பெற்றுக்கொடுக்கும் நிகழ்வானது அடுத்த மாதம் 3ஆம் 4ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக வைத்தியர் தேவிகா மென்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment