August 17, 2016

விரைவில் விளைவுகளை எதிர்கொள்வாராம் கோத்தா! - சரத் பொன்சேகா கூறுகிறார் !

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான இரண்டு முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் 90 வீதம் நிறைவந்துள்ளதாகவும்,
விரைவில் அதன் விளைவுகளை கோத்தாபாய ராஜபக்ச எதிர்கொள்வார் என்றும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

 
முறைகேடான வகையில் போர் விமானங்களைக் கொள்வனவு செய்தமை, டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை புனரமைப்பதற்கு 90 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த இரண்டு முறைப்பாடுகள் தொடர்பாகவும், நடத்தப்படும் விசாரணைகள் 90 வீதம் பூர்த்தியாகியுள்ள நிலையில், அவர் விரைவில் இதற்கு பதிலளிக்க வேண்டும். எழுத்துமூலமான ஆதாரங்கள் ஆவணங்களின் அடிப்படையில் தான் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்தும் ஊழல்கள் குறித்தும், விசாரிப்போம் என நாம் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளோம். அதனைத் தான் தற்போது நாம் செய்து வருகின்றோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது குடும்பத்துக்கு வெள்ளையடிக்க முனைகிறார். அதற்கு காலம் தாமதமாகிவிட்டது.

சட்டத்தை மீறாத படையினர் எவரும் காணாமற்போனோர் அலுவலகத்தால் இலக்கு வைக்கப்படமாட்டார்கள். இந்தப் அலுவலகம் வெளிநாட்டு அழுத்தங்களுக்காக அமைக்கப்பட்டதல்ல. மாறாக நாட்டில் அனைத்து விடயங்களும் வெளிப்படையாகவும், சட்டரீதியாகவும் நடைபெறுகிறது என்று அனைத்துலக சமூகத்துக்கு காட்டவே காணாமற்போனோர் அலுவலகம் அமைக்கப்படவுள்ளதாக என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment