August 17, 2016

நடந்தவற்றை வெளியில் சொன்னால் நாளை நானும் காணாமல் போகலாம் என்ற அச்சம் நீங்கவில்லை!

இந்த நாட்டில் சிறுபான்மை இனங்களைச் சிறுமைப்படுத்தி இரண்டாம் அல்லது மூன்றாந்தரப் பிரஜைகளாக கையாளும் மனோநிலையை மாற்ற வேண்டும் என மட்டக்களப்பு வாகரை கதிரவெளி கிராமவாசியான கணபதிப்பிள்ளை லோகநாதன் வேண்டுகோள் விடுத்தார்.


இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு மட்டக்களப்பு மாவட்ட வாகரை பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்களான தமிழர்களையும் முஸ்லிம்களையும் பெரும்பான்மை இனத்தவர்களான படையினரும் பொலிஸாரும் தெருவில் நிறுத்தி அடையாள அட்டைகளை பரிசோதிக்கும் போது எங்களின் மனதில் ஒருவித அவமான உணர்வு தோன்றுகிறது.

கடந்த காலத்தில் நடந்தவைகளை இன்னும் மனதில் சுமந்து கொண்டு பலர் நடைப்பிணங்களாக வாழ்கின்றார்கள். மேலும் பலர் நொந்து போய் மடிந்தே விட்டார்கள். துயரச் சுமைகளை முழுமையாக வெளியில் விடுவதற்கான சந்தர்ப்பம் இப்பொழுதும் வந்து விட்டது என்று களிப்படைந்து விட முடியாது.

நடந்தவற்றை வெளியில் சொன்னால் நாளை நானும் காணாமல் போகலாம் என்ற அச்சம் நீங்கவில்லை. தமிழரும் முஸ்லிமும் சிங்களவரும் ஏன் சம அந்தஸ்துள்ள கௌரவமான ஜனாதிபதிகளாக இருந்து நாட்டை சமாதானத்தை நோக்கி நகர்த்த முடியாது? இது கனவுதான்.

இது நல்லாட்சி என்று சொல்வதற்கு எம்மால் முடியாது ஏனெனில் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் எங்களது பார்வையில் இன்னமும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் அநியாயம் இழைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.

No comments:

Post a Comment