August 16, 2016

குமாரபுரம் படுகொலை வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்யத் தயாராகிறது கூட்டமைப்பு!

குமாரபுரம் படுகொலைகளுக்கு எதிரான நேரடிச் சாட்சியங்கள் இருந்த போதும் அவை சரியான முறையில் அரச தரப்பால் கையாளப்படாமையினாலேயே சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
இந்நிலையில் குறித்த வழக்கை மேன்முறையீடு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருவதாக, வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

 
சம்பவத்தை நேரடியாக கண்டவர்கள் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு சாட்சியமளித்துள்ள நிலையில், சாட்சியங்களை கையாண்ட முறையில் காணப்பட்ட சில குழப்பங்கள் காணப்பட்டமையினால் சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த வழக்கை மேன்முறையீடு செய்வது மற்றும் வேறு எவ்வாறான நிவாரணங்கள் மூலமாக நீதியை பெற்றுக்கொள்ள முடியுமென தற்போது ஆராய்ந்து வருவதாக சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு குமாரபுரத்தில் 26 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, 36 பேர் வரை காயமடைந்தனர். இது தொடர்பில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் 8 இராணுவ வீரர்கள் சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டதோடு, ஒருவர் பின்னர் நிரபராதியென விடுவிக்கப்பட்டார். மற்றொருவர் இறந்துவிட்டார். எஞ்சிய 6 இராணுவ வீரர்களுக்கு எதிராக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர்களும் குற்றமற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டு அண்மையில் அநுராதபுரம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment