July 30, 2016

ஈழத்தமிழ் அகதிகளின் கண்ணீர்க் கதை!

ஒரே மொழி, ஒரே இனம், இலங்கையில் இருந்து தமிழகத்தில் தஞ்சமடைந்ததால் அவர்கள் அகதிகள். இலங்கையில் யுத்தம் ஓய்ந்து விட்டது.


காற்றில் கலந்த கந்தக வாசனை இப்போது இல்லை. முள்வேலிகள் இன்னும் திறக்கப்படவில்லை. சொந்த நாட்டில் சிறைப் பிடிக்கப்பட்ட கைதிகளைப் போல் ஒரு பரிதாப வாழ்க்கை.

தமிழகத்திற்கு புலம் பெயர்ந்தவர்கள், உளவுப் பிரிவின் கண்காணிப்பு, கியூ பிராஞ்சின் கிடுக்குப் பிடி, ஈழத்தமிழர் முகாமை விட்டு வெளியே போகவர என எந்த நடமாட்டமும் பதிவேடுகளில் பதிவு, இரை தேடிப்போன பறவை கூட்டிற்கு வருவதுபோல சாயங்காலம் ஆறு மணிக்குள் கூட்டிற்கு திரும்பவேண்டிய இக்கட்டான ஒரு வாழ்க்கை.

எந்த ஒரு தேவைக்கும் மற்றவர்களின் கையை எதிர்பார்த்து நிற்கும் நிலை. இதுதான் ஈழ அகதிகளின் வாழ்வின் ஒருபக்கம்.

இன்னும் திறக்கப்படாத பல பக்கங்கள் ஈழத்தமிழ் அகதிகளிடம் ஒழிந்திருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பழவிளை ஈழ மக்கள் குடியிருப்பு அகதிகள் முகாம் மேற்சொன்னவற்றுக்கு உதாரணமான ஒரு முகாம்.

'ஆஸ்ரேலியாவுக்கு தப்பி செல்லாதீர்கள்', என சுவர்களில் அப்பிக்கி்டக்கும் போஸ்டர் வாசகங்களுடன் அது நம்மை வரவேற்கிறது.

அகதிகளை இன்னும் அழுத்தமாக எச்சரிக்கும்படியாக, சுவர்களில், கடலில் இரு படகுகள் கவிழ்ந்து கிடப்பதுபோன்று ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார்கள்.

புறாக் கூடுகளை அடுக்கி வைத்தது போல் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் வீடுகள்.ஆதிமனிதன் குகையைப் போன்று அதில் சின்ன வாசல்கள். சிதிலமடைந்த பல வீடுகள் எப்போதும் இடிந்து விழும் என்பதுபோல கிலியைத் தருகின்றன.

தவறு செய்யாமல் தண்டனை அனுபவிப்பது போன்ற இறுக்கமான உணர்வுடன் மனிதர்கள் எதிர்ப்படுகிறார்கள். அவர்களது வாழ்வு முறை, உலகின் நாகரிக வாழ்விற்கு சற்றும் பொருந்தாததாக இருக்கிறது.

டியுஷன் சென்டர் என்கிற கொங்கிறீற் கட்டிடம் மட்டும் தான் முகாமில் உறுதியான ஒரு கட்டடம். ஆனால் அங்கு அரிசி மூட்டைகள்தான் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

மகாத்மா காந்தி மற்றும், அப்துல் கலாம் இருவரது படங்களின் கீழ் ஒட்டப்பட்ட ஒரு சாட் பேப்பரில்," ஈழம் எங்கள் நாடாகும், இனிமையான வீடாகும். ஈழத் தமிழகம் தழைக்கட்டும், வலி தாங்கும் மூங்கில் புல்லாங்குழல், நலம் தரும் நட்பு"- என்று எழுதப்பட்ட வாசகம் ஈழத்தமிழர்களின் ஏக்கத்தை சொல்கிறது.

No comments:

Post a Comment