July 30, 2016

அரசியல் சூழ்ச்சிகளால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது!- ஜனாதிபதி!

அரசியல் சூழ்ச்சிகள் மூலம் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் இன்று நடைபெற்ற நில மேஹேவர தேசிய நடமாடும் சேவையின் நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.


நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

மக்கள் என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் பதவிக்காலம் இன்னும் முடிவடையவில்லை.

ஒன்பது லட்சம் கோடி கடன் சுமையுடன் சர்வதேசத்தில் இருந்து வரும் பல்வேறு பிரச்சினைகளுடன் இந்த இரண்டு ஆண்டுகள் முன்னாள் ஜனாதிபதியும் அவரது அரசாங்கம் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டிய ஏச்சு பேச்சுகளை அரசாங்கம் என்ற வகையில் நானும் பிரதமரும் எதிர்நோக்கி வருகின்றோம்.

அரசாங்கம் என்ற வகையில் புகழும் பாராட்டும் கிடைப்பது போல் விமர்சனங்களும் அதிருப்திகளும் எந்த மட்டத்தில் இருந்தாலும் நான், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட இந்த அரசாங்கத்தை அடுத்த 5 வருடங்களுக்கு எவராலும் வீழ்த்த முடியாது என்பதை தெளிவாக கூறவேண்டும்.

அரசாட்சி செய்து, அரச நாற்காலியில் இருந்து விட்டு, கடும் வெயிலில் கால்கள் சுட மீண்டும் தெருவில் நடந்து, நடக்க முடியாது போகும் போது எவராவது தூக்கி வாகனத்தில் ஏற்றி விடுவார்கள் என்றால், அது எந்த கர்மத்தின் விதி என்பது பௌத்தர்களான எமக்கு தெரியும்.

நாட்டின் அரசியலமைப்பு மற்றும் சட்டத்திற்கு அமைய அரசாங்கத்தின் பதவிக்காலம் மிக வலுவாக முன்னோக்கி செல்லும்.

சதித்திட்டங்கள் மற்றும் அரசியல் சூழ்ச்சிகள் மூலம் இந்த அரசாங்கத்தை வீழ்த்தவோ கவிழ்க்கவோ முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment