July 30, 2016

இராணுவ நீதிமன்றில் கடற்படை அதிகாரிக்கு விதித்த தண்டனையை ரத்து செய்த ஜனாதிபதி!

இராணுவ நீதிமன்றில் விதிக்கப்பட்ட தண்டனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரத்து செய்துள்ளார்.


அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத ஆட்கடத்தல்களில் ஈடுபட்டமை மற்றும் கப்பம் பெற்றுக் கொள்வதற்காக தமிழ் இளைஞர்களை கடத்தி கொன்றமை உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள சிரேஸ்ட கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகளில் பிரதான சாட்சியாளரான லெப்டினன் கமாண்டர் கே.சீ. வெலகெதரவிற்கு இராணுவ நீதிமன்றில் விதிக்கப்பட்ட தண்டனை ஒன்றை ஜனாதிபதி இவ்வாறு ரத்து செய்துள்ளார்.

குறித்த அதிகாரியை பழிவாங்கும் நோக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாகக் கருதி தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அறிவிக்காமல் 17 நாட்கள் சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இராணுவ நீதிமன்றினால் வழக்குத் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.

வெலகெதரவின் சேவை மூப்பையும் நான்கு ஆண்டுகளுக்கு இடைநிறுத்தும் வகையில் தண்டனை விதிக்கப்பட்டது.

பழி வாங்கும் நோக்கில் இந்த தண்டனை விதிக்கப்பட்டதாகவும், இராணுவ நீதிமன்றின் அடிப்படைச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் கூறி வெலகெதர ஜனாதிபதியிடம் மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை கவனத்திற் கொண்ட ஜனாதிபதி நல்லாட்சியில் சட்டம் பக்கச்சார்பாக செயற்பட முடியாது எனத் தெரிவித்து தண்டனையை ரத்து செய்துள்ளார்.

No comments:

Post a Comment