யுத்தம் முடிவடைந்ததையடுத்து, 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ள விடுதலைப் புலிகளின் பொருண்மியப் பொறுப்பாளர் கரிகாலன் மற்றும்
அவருடைய மனைவி டாக்டர் பத்மலோஜினி ஆகியோர் உட்பட ஐந்து பேர் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வுமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மனுக்கள் தொடர்பான வழக்குகளில், இவர்கள் கடைசியாக இராணுவத்தின் பொறுப்பில் இருந்து காணாமல் போயிருப்பது தொடர்பில் நேரில் கண்டவர்களின் தகவல்களும், வலுவான ஆதாரங்களும் ஆவணங்களாக இணைக்கப்பட்டுள்ளன.இந்த வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் புதனன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுக்களை ஆராய்ந்த நீதிபதி, இவர்கள் காணாமல் போயிருப்பது தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இராணுவ தரப்பின் கருத்துக்களை நீதிமன்றத்தில் வந்து தெரிவிப்பதற்காக சந்தர்ப்பம் வழங்கி, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கில் காணாமல் போயிருப்பவர்களின் சார்பில் சிரேஸ்ட மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல், சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
விடுதலைப்புலிகளின் பொருண்மியப் பொறுப்பாளர் கரிகாலன் எனப்படும் சிவஞானம் கோபாலரட்னம், அவருடைய மனைவி டாக்டர் சிவலிங்கம் பத்மலோஜினி ஆகியோர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி, சரணடைகின்ற விடுதலைப்புலி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பும், பொதுமன்னிப்பும் வழங்கப்படும் என்று ஒலிபெருக்கிகள் மூலமாக, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பகிரங்கமான உத்தரவாதத்தைய-டுத்து, முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில், இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர், காணாமல் போயிருப்பதாக கரிகாலனின் மாமியாரும், அவருடைய டாக்டர் மனைவி பத்மலோஜினியின் தாயாருமாகிய சிவலிங்கம் இலக்குமி தனது ஆட்கொணர்வு மனுவில் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஏனைய விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் இராணுவத்தினரிடம், சரணடைந்ததைத் தானும், தனது உறவினர்களும் நேரில் கண்டதாக இந்த ஆட்கொணர்வு மனுவில் சத்தியக்கடதாசிகளின் மூலம் உறுதிப்படுத்தி தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று வவுனியா கிடாச்சூரியில் ஒரே வளவுக்காணியில் வசித்து வந்த முருகையா ரூபகாந்தன், அன்ரன் ஜோசப் மணிவண்ணன் ஆகிய இரண்டு இளைஞர்களும், கிடாச்சூரி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த திலிப்குமார என்ற இராணுவ சிப்பாயினால் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்காக முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின்னர் காணாமல் போயிருப்பதாக ரூபகாந்தனின் மனைவி லூசியாவும், மணிவண்ணனின் தாயார் அன்ரன் ஜோசப் சிதம்பரம் ஆகியோர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சியைச் சேர்ந்த சுப்பையா அண்ணாமலை என்பவர் தனது வாகனங்கள் திருத்துகின்ற மோட்டார் மெக்கானிக்காகத் தொழில் செய்து வந்த தனது மகன் அண்ணாமலை ஆனந்தன் வவுனியா மடுக்கந்தை பகுதியில் கராஜ் நடத்தி வந்தபோது 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டதாக, வவுனியா ஜோசப் முகாமுடன் இணைந்திருந்த 23 ஆவது இராணுவ கட்டளைத் தலைமையகத்தி;ன் நிர்வாக அதிகாரியினால் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் காணாமல் போயிருப்பதாகவும், அவரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐந்து பேர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நான்கு ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அவகாசம் வழங்கி, விசாரணைகளை எதிர்வரும் ஜுலை மாதம் 2 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment