July 2, 2016

இராணுவமுகாங்களும் இராணுவநினைவுத் தூபிகளும் அகற்றபடவேண்டும்!

கிளிநொச்சி நகரத்தில் நிலைகொண்டுள்ள இராணுவமுகாங்கள் அகற்றப்படுவதுடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள இராணுவநினைவுத் தூபியும் அகற்றப்படவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பான முகாமைத்துக் குழுவின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான எஸ்.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை செயலாளர்கள், எந்திரிகள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கிளிநொச்சி நகர அபிவிருத்தி தொடர்பில் ஆராய்நதனர்.

கிளிநொச்சி நகரத்தின் அபிவிருத்தி இராணுவ வெளியேற்றம் அவசியமானது என்றும் நகரத்தின் முக்கிய இடங்கள் பலவும் இராணுவத்தின் கையில் உள்ளதாகவும் வளம் பொருந்திய, பொருளாதாரம் மிக்க இடங்கள், அழகான பகுதிகள் இராணுவத்திடம் உள்ளதாகவும் நகரத்தின் அபிவிருத்திக்கு இது பாரிய இடைஞ்சலாக காணப்படுகிறது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, கிளிநொச்சி நகரத்தின் டிப்போ சந்தியில் தென்னிலங்கையில் இருந்து  கொண்டு வரப்பட்ட பழமையான கற்களை அடுத்தி கிளிநொச்சி நகரத்தின் அடையாளத்தையும் வரலாற்றையும் திசை திருப்பும் விதமாக அமைத்துள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ நினைவுத் தூபியை அகற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். உயர் பாடசாலை ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள குறித்த இராணுவ நினைவுத் தூபி இளைய சந்ததியிடம் பகைமை உணர்வை தூண்டும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த இராணுவ நினைவுத் தூபிக்கு முன்பாக கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் பிரதேச சபையினரின் ஒத்துழைப்பின்றி பூங்கா ஒன்று அமைக்கப்படுவதாகவும் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதேவேளை இராணுவ நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தை நகர அபிவிருத்தி சபை ஏன் இராணுவத்தினருக்கு வழங்கியது? என்றும் அதற்கு யார் அனுமதி கொடுத்தது என்றும் கேள்வி எழுப்பட்டது.

குறித்த பகுதியை பிரதேச சபையிடம் கையளிக்கவேண்டும் என்று கரைச்சிப் பிரதேச  சபை செயலாளர் தெரிவித்தார். கிளிநொச்சி நகரத்தில் பேருந்து நிலையம் ஒன்று இல்லாதிருப்பது பெரும் பலவீனம் என்று நகர அபிவிருத்தி சபையின் முன்வரைபில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கிளிநொச்சி அரச பேருந்து நிலையத்தை அறிவியல் நகருக்கு மாற்றுவது தொடர்பிலும் இங்கு முன் வைப்புக்கள் இடம்பெற்றன.

கலாசார மண்டபம் அமைத்தல், பொதுநூலகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டது. கிளிநொச்சி நகரத்தை நவீன நகரமாகவும், தனித்துவமான நகரமாகவும், அதன் அடையாளங்களை பாதுகாக்கும் வகையிலும் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. இராணுவ நினைவுத் தூபி தொடர்பான பிரச்சினை எதிர்காலங்களில் தீரக்கப்படும் சூழ்நிலைகளும் உருவாகலாம் என்று மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். 

No comments:

Post a Comment