யாழ்ப்பாணத்துக்குள் பிரவேசிப்பவர்கள் யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவை தரிசிக்காமல் உள்நுழைய முடியாது. அந்த வளைவைக் கண்டதும் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு அவர்களை ஆக்கிரமிப்பதை
உணர்ந்தவர்கள் ஏராளம்.
உணர்ந்தவர்கள் ஏராளம்.
இந்த வளைவின் அருகில் நடமாடும் கடை ஒன்றையும் அண்மை நாட்களில் நிச்சயம் பார்க்க முடியும்.
ஆட்டோ ஒன்று கடையாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் பல வகையான பழங்கள் குவிந்து கிடக்கின்றன.
இந்த நடமாடும் கடையின் உரிமையாளர் சுண்டுக்குளியைச் சேர்ந்த அ. அமலன் என்பவர்.
பொலிஸ்காரர், நகர, பிரதேச, சபையினரின் விரட்டல்கள் தன்னை இந்த நடமாடும் கடையை அமைக்கத் தூண்டியதாகக் கூறிய அவர் எம்மிடம் பகிர்ந்து கொண்டவை வருமாறு:
தெருவோரங்களில் வியாபாரம் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தேன். எனது வியாபாரம் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்துவதாகக் கூறி பொலிஸார் விரட்டுவர்.
இதேபோன்றே பிரதேச, நகர சபையினரும் என்னை வியாபாரம் செய்ய விடாது கலைப்பார்கள். அச்சமயத்தில் பொருட்களை உடனடியாகக் கொண்டு செல்ல முடியாது பெரும்பாடுபட்டேன். அங்கிருந்து சென்று வேறு இடத்தில் வைத்துப் பொருட்களை விற்றாலும் இதே நிலையே தொடர்ந்தது.
இவர்கள்தான் என்னைத் விரட்டினார்கள் என்றால் மழையும் வெயிலும்கூட என்னை நிம்மதியாகத் தொழில் செய்ய விடவில்லை. இவ்வாறான செயற்பாடுகளால் எனது வியாபாரம் பாதிக்கப்பட்டது. வருமானம் இல்லாததால் எனது குடும்பமும் வறுமையில் வாடியது.
அன்றாட வாழ்க்கையை நடத்தப் பெரிதும் சிரமப்பட்டேன். எனவே எனது வியாபாரத்தை பாதிப்பின்றி எவ்வாறு கொண்டு நடத்துவது என்று சிந்தித்தேன்.
அப்போதுதான் நடமாடும் கடை ஒன்றை அமைத்தால் என்ன என்ற ஐடியா எனக்குத் தோன்றியது. அதை செயற்படுத்தத் தீர்மானித்தேன்.
ஓரளவு பாவிக்கக்கூடிய நிலையில் இருந்த ஓட்டோ ஒன்றை 30 ஆயிரம் ரூபாவுக்கு விலைக்கு வாங்கினேன். அதில் பொருட்களை கொண்டு செல்வதற்கு ஏற்றவாறு வடிவமைத்துத் தருமாறு பல வெல்டிங் கடைக்காரிடம் சென்றேன். அவர்களோ அவ்வாறு செய்ய முடியாது எனக் கூறி கை விரித்து விட்டார்கள்.
இறுதியாக எனக்குத் தெரிந்த வெல்டிங் கடைக்காரர் ஒருவரிடம் சென்று நான் அதனை செய்கிறேன். எனக்கு உதவியாளாக இரும்பு ஒட்டும் வேலை தெரிந்தவரைத் தாருங்கள் எனக் கேட்டேன் அவரும் சம்மதித்தார். அதன் பின்னரே இந்த நடமாடும் கடையை தயாரித்தேன்.
இப்போது பொலிஸார், பிரதேச, நகர சபையினர் கலைத்தால் உடனடியாக எனது பொருட்களுடன் சென்று வேறு ஓர் இடத்தில் எனது வியாபாரத்தை செய்ய முடிகிறது.
இந்த வாகனத்தில் அதிக பொருட்களை தூர இடங்களுக்கும் கொண்டு செல்ல முடிகிறது. அத்துடன் காலத்துக்கு ஏற்ப எனது வியாபாரத்தையும் மாற்றிக் கொள்ள முடிகிறது. என்கிறார் அந்த தன்னம்பிக்கையாளர்.
இவ்வாறான நம்பிக்கையாளர்களும் - சிந்தனையாளர்களும் இருப்பதனால்தான் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் இன்னமும் வீழ்ந்து விடவில்லை. இவர்களை ஊக்குவிக்க வேண்டியது எமது சமூகத்தின் கடமை.






No comments:
Post a Comment