January 25, 2015

ரணில் ஆபத்தானவர்! நாம் கவனமாக இருக்க வேண்டும்! சிறீதரன்!

ரணில் விக்கிரமசிங்க மிகவும் ஆபத்து மிக்க ஒரு நபர். அவருடைய காலத்தில்தான் நாம் சிதைக்கப்பட்டோம். எனவே இந்த புதிய அரசுக்கு கீழும்
கூட்டமைப்பு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். – என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழர்கள் தேசிய இனத்தவர்கள். நாங்கள் ஒரு சிறுபான்மை இனம் அல்ல. எங்களில் பலருக்கு இது தொடர்பில் மயக்கங்கள் உள்ளது. ஆகவே மயக்கத்தில் இருந்து தெளிய வேண்டும்.
தமிழினம், சுயநிர்ணய உரிமைக்காக இன்று நேற்று அல்ல 70, 80 ஆண்டுகளுக்கு மேலாக போராடுகின்ற ஒரு இனமாகும்.
சுயநிர்ணய உரிமையை கேட்பதற்கு நாங்கள் வரலாற்று ரீதியான ஒரு நிலப்பரப்பை கொண்டிருக்க வேண்டும். அவ் நிலப்பரப்பை நாங்கள் கொண்டிருக்கின்றோம். அத்துடன் மொழி, கலாசாரம் என்பவற்றையும் நாம் பேணிவந்துள்ளோம்.
மஹிந்த சிந்தனையை தோற்கடித்து மைத்திரி யுகத்தை உண்டாக்குவதல்ல எங்கள் நோக்கம். மாற்றம் என்ற ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது. மூச்சு வீடுவதற்கான காலம் வேண்டும். பேச்சுச் சுதந்திரம் வேண்டும் என்பதற்காக அந்த காலத்திற்காக வாக்களியுங்கள் என கேட்டிருந்தோம். அதனூடாக ஜனவரி 9 ஆம் திகதி இந்த நாட்டில் மாற்றம் ஏற்பட்டது.
100 நாட்களுக்குள் எல்லாம் நடந்து விடும் என்று எங்கள் மக்களிடம் நாங்கள் பொய்களைச் சொல்ல முடியாது. அதற்கு கால இடைவெளி இருக்கின்றது. அந்த கால இடைவெளியில் நாங்கள் அதனை செய்து கொண்டுதான் செல்ல வேண்டும்.
ரணில் நல்லது செய்வார் அல்லது மைத்திரி நல்லது செய்வார் என்று பார்க்காது, இவர்கள் எவ்வளவு தூரம் எமது பிரச்சினையில் கவனம் செலுத்துவார்கள் என்பதையே நோக்கவேண்டும்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களையே ரணில் விக்கிரமசிங்க சில வேளைகளில் தனித்தனியே சந்திப்பார். அவர் மிக மிக முக்கிய ஆபத்திற்கு உரிய நபர்.- என்றார்.

No comments:

Post a Comment