June 8, 2014

இராணுவ இயந்திரத்தின் மூலம் அச்சுறுத்தி மரணச் சான்றுகள் வழங்கப்படுகின்றன – கஜேந்திரன்

வன்னி இறுதி யுத்தத்தின் பின்னர் உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான  காணாமல் போன இளைஞர் யுவதிகளுக்கு
என்ன நடந்தது என்று கடந்த ஐந்து வருடங்களாக உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். 

அவ்வாறு உறவினர்களால் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த சிலர் முல்லைத்தீவில் அமைந்துள்ள நீதிமன்றிலே ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார்கள். இவ்வழக்குகள் இழுத்தடிக்கப்படுகின்ற நிலையில் காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனவும், சர்வதேசம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும், ஐந்து ஆணடுகள் ஆகியும் சர்வதேசம் இதில் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வில்லை என்பதை வலியுறுத்தியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேசம் உள்ளக விசாரணை, உள்ளக விசாரணை என சிறீலங்காவுக்குச் சந்தர்பங்களை வழங்கிக்கொண்டு இருக்கின்ற இச்சூழலில் சிறீலங்கா அரசாங்கம் தனது இராணுவ இயந்திரத்தினைப் பயன்படுத்தி , காணாமல் போன உறவுகளின் குடும்பத்தினரை அச்சுறுத்தி, அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குகின்ற செயற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கின்றதே தவிர, காணாமல் போனோர் தொடர்பில் ஒரு நேர்மையான விசாரணையை நடத்தி காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய செயற்பாடுகளை இதுவரை சிறீலங்கா அரசாங்கம் செய்யவில்லை. 

சர்வதேச அழுத்தத்திற்காக ஒரு ஆணைக்குழுவினை நியமித்துள்ளார்கள். அக்காணாமல் போன ஆணைக்குழு கூட புலிகளால் தான் இவர்கள் காணாமல் போனார்கள் என்ற உண்மைக்குப் புறப்பான வாக்கு மூலங்களை உறவினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்களே தவிர, உண்மையில்  காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் இருந்து உண்மையான கருத்துக்களை அறிந்து, சரணடைந்தவர்களை எந்த இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்களோ அவர்களை இனம்கண்டு அல்லது கடத்தலுடன் தொடர்புடையவர்களை இனம் கண்டு அவர்களுக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய எந்த முயற்சிகளிலும் ஈடுபடுவதாக இதுவரை இல்லை. 

No comments:

Post a Comment