June 8, 2014

அடிப்படை வசதிகள் அற்றநிலையில் மறவன்புலவு மக்கள்!

மறவன்புலோவில் மீள்குடியேறிய மக்களுக்குஅடிப்படை வசதிகள் இல்லை தாங்கள் சிரமப்படுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

தென்மராட்சி - மறவன்புலோ வடக்கில் மீள்குடியமர்ந்துள்ள பொதுமக்களுக்கு இதுவரை உரிய போக்குவரத்து மற்றும் குடிதண்ணீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தேர்தல் காலங்களில் மட்டும் தங்களைத் தேடி வருகின்ற அரசியல்வாதிகள் அதன் பின்னர் தங்களைத் திரும்பியும் பார்ப்பதில்லையென்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபைகளுக்கு உட்பட்ட மேற்படி கிராமத்தின் பிரதான வீதியான பொன்னம்பலம் வீதி மிக நீண்டகாலம் புனரமைக்கப்படவில்லை. இதனால் சுமார் 80ற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்திற்கான பாதை இல்லாமல் பல அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந் 2009 ஆம் ஆண்டு மேற்படி கிராமத்தில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் மேற்படி பிரதான வீதி புனரமைக்கப்படாமல் பற்றைகள் வளர்ந்து காட்சியளிக்கின்றன.
இவ் வீதி புனரமைப்பிற்காக 2010 ஆம் ஆண்டு வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு மண், கல் மற்றும் இதர பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளபோதும் இன்றுவரை அந்தப் பொருட்கள் வீதியிலேயே போடப்பட்டுள்ளன. புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகவில்லை. இது தொடர்பில் சாவகச்சேரி பிரதேச சபையிடம் கேட்டால் அவர்கள் உரிய பதில் வழங்குவதில்லையென்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்கள் வீதிப் புனரமைப்புக்கென்று ஒதுக்கப்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதா என்றும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும் கிராமத்திற்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமையால் இந்த மக்கள் இதுவரை காலமும் புகையிரதப் பாதையூடாகவே போக்குவரத்துச் செய்தனர். ஆனால், தற்போது புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான புகையிரதப் பாதை புனரமைக்கப்படுவதால் அந்தப் பாதையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வீதி புனரமைக்கப்படாமையால் பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் தினமும் மாற்றுப்பாதைகளை பயன்படுத்துகின்றனர். இதற்காக அவர்கள் தினமும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது. இதேபோன்று விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் இங்குள்ள குடும்பங்களுக்கு சுவிஸ் அரசாங்கத்தினால் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் சில குடும்பங்களுக்கு அவை கிடைக்கவில்லை. அத்துடன் குடிதண்ணீர் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. தாங்கள் மீள்குடியேற்றப்பட்டு ஐந்து வருடங்களாகின்ற போதிலும் தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பாக எவரும் அக்கறை செலுத்தாமை தொடர்பாக கடும் விசனம் வெளியிட்டுள்ள மக்கள் இது தொடர்பாக இனியாவது சாவகச்சேரி பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும், வடக்கின் வசந்தம் அதிகாரிகள் போன்றோர் அக்கறை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment